தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விவசாயிக்கு உணவுக் குழாயில் நுண்துளைக் கருவி மூலம் புற்றுநோய்க் கட்டி அகற்றி சாதனை படைக்கப்பட்டது.
தஞ்சாவூர் அருகேயுள்ள ஆலக்குடியைச் சேர்ந்தவர் விவசாயி ஆர். துரைராஜ் (55). இவர் ஏறத்தாழ ஒன்பது மாதங்களாகச் சாப்பிட முடியாமல் அவதிப்பட்டார். 20 நாள்களுக்கு முன் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்ற இவரை இரைப்பைக் குடல்நோய் அறுவைச் சிகிச்சை நிபுணர் யு. அரவிந்தன் பரிசோதனை செய்தபோது உணவுக் குழாயில் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, 10 நாள்களுக்கு முன் மருத்துவர் அரவிந்தன், மயக்கவியல் நிபுணர் முத்துகுமார் உள்ளிட்டோர் நுண்துளைக் கருவி மூலம் புற்றுநோய் கட்டியை அகற்றினர். இப்போது துரைராஜ் முழு குணமடைந்துள்ளார் என்றார் மருத்துவக் கல்லூரி முதல்வர் கி. பிச்சை பாலசண்முகம்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது:
இந்த மருத்துவமனைக்கு துரைராஜ் வரும்போது அவரது உடல் நிலை மிக மோசமாக இருந்தது. பொதுவாக இதுபோன்ற நோய்க்கு அறுவைச் சிகிச்சைதான் மேற்கொள்ளப்படும். முதல் முறையாக கத்தி, ரத்தமின்றி நுண்துளைக் கருவி மூலம் சிகிச்சை அளித்து புற்றுநோய் கட்டி முழுமையாக அகற்றப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற சிகிச்சை சென்னைக்கு அடுத்து டெல்டா, தென் மாவட்ட பகுதிகளில் இங்குதான் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதே சிகிச்சையைத் தனியார் மருத்துவமனைகளில் மேற்கொண்டால் ரூ. 4 லட்சம் முதல் 5 லட்சம் வரை செலவாகும். இங்கு தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றார் பிச்சை பாலசண்முகம்.
மருத்துவர் அரவிந்தன் தெரிவித்தது:
இதே நோய்க்கு அறுவைச் சிகிச்சை செய்தால் மருத்துவமனையில் ஒரு மாதத்துக்கு மேல் தங்க வேண்டி இருக்கும். நுண்துளைக் கருவி சிகிச்சை மூலம் 10 நாள்களில் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சிகிச்சையில் துரைராஜுக்கு மார்பு, வயிற்றில் தலா 3 துளைகள் இட்டு, உணவுக் குழாயில் இருந்த புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது.
பொதுவாக, புகையிலை, மதுப்பழக்கம், நீண்ட நாள்களாக நெஞ்சு எரிச்சல் பிரச்னை உள்ளவர்களுக்கு உணவுக் குழாயில் புற்றுநோய் வருகிறது. இந்த வகை புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 12 ஆண்டுகளில் ஏறத்தாழ 400 பேருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றார் அரவிந்தன். ரத்த நாள அறுவை சிகிச்சைப் பிரிவுத் தலைவர் எஸ். மருதுதுரை, மருத்துவக் கண்காணிப்பாளர் எம். இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.