நாகை அகஸ்தீஸ்வரர் கோவிலில் சிம்ம வாகனத்தில் சாமி வீதி உலா

201602160154286231_Nagai-Agastcuvarar-Temple-Zimmer-motorists-Sami-Promenading_SECVPF

மாசிமக திருவிழாவையொட்டி நாகை அகஸ்தீஸ்வரர் கோவிலில் சிம்ம வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது.

மாசிமக திருவிழா

நாகை வெளிப்பாளையத்தில் அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான மாசிமக திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கடந்த 12-ந்தேதி விநாயகர் வழிபாடு, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, அய்யனார், பிடாரி உற்சவம், காப்பு கட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்கியது. அதைதொடர்ந்து கோவிலில் எண்திசை காப்பு கட்டுதல், சுவாமி வீதிஉலா காட்சி ஆகியவை நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு சுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா காட்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பூத வாகனம், யானை வாகனம், இந்திர விமானம், குதிரை வாகனம், ரிஷப வாகனம், கைலாச வாகனம் ஆகியவற்றில் வீதிஉலா காட்சி நடக்கிறது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 21-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அதைதொடர்ந்து நடராஜர் தீர்த்தமும், 22-ந்தேதி மாசிமகம் தீர்த்தம், கடற்கரைக்கு சாமி புறப்பாடு, சமுத்திர தீர்த்தம் கொடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதைத்தொடர்ந்து மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான அகஸ்தீஸ்வரர் அனந்தவல்லி அம்பாளுடன் தெப்பத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் பழனித்துரை, நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன் மற்றும் கோவில் சிவாச்சாரியார்கள் செய்து வருகின்றனர்.

Leave a Reply