தவறாக கணிக்கப்படும் கருத்துக்கணிப்புகள். வைகோ குற்றச்சாட்டு
புதிய தலைமுறை தொலைக்காட்சி நேற்று ஆட்சியை பிடிக்கும் கட்சி எது என்பது குறித்து ஒரு கருத்துக்கணிப்பை எடுத்து வெளியிட்டது. இந்த கருத்துக்கணிப்பு அதிமுகவிற்கு சாதகமாகவே இருந்த நிலையில் இந்த கருத்துக்கணிப்புகள் தவறான தகவல்களையே தெரிவிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
சிவகாசியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:
“கடந்த தேர்தல்களில் தென் மாவட்டங்களில் ம.தி.மு.க.வுக்கு 24 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.தற்போது மக்கள் நலக்கூட்டணியின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.
அதிமுக,திமுகவை விரும்பாத நடுநிலையாளர்கள் மக்கள் நல கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். மக்கள் நலக் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
தற்போது வெளியாகி வரும் கருத்து கணிப்புகள் தவறான தகவல்களை தெரிவித்து வருகிறது. மக்கள் நல கூட்டணியால்தான் ஆட்சி மாற்றம் ஏற்படும். மது, இல்லாத ஊழலற்ற அரசை மக்கள் நலக் கூட்டணி அமைக்கும். அதிமுக கூட்டத்துக்குப் பணம், மது கொடுத்து ஆட்களைச் சேர்க்கிறார்கள்.
ஆனால் மக்கள் நல கூட்டணி பொதுக் கூட்டத்துக்கு தொண்டர்கள், பொதுமக்கள் தங்களுடைய சொந்த பணத்தை செலவு செய்து கலந்து கொள்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளாக அதிகாரிகள் முதல்வரை சந்திக்க வில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நாங்கள் நேரடியாக மக்களை சந்திப்போம்.”
இவ்வாறு வைகோ பேசினார்.