கச்சத்தீவில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது அந்தோணியார் திருவிழா
இந்திய மற்றும் இலங்கை நாட்டின் மக்கள் குறிப்பாக மீனவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் கலந்து கொள்வது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஏற்கனவே பதிவு செய்திருந்த 6,500 பேர் இன்று கச்சத்தீவுக்கு செல்கின்றனர்.
கடந்த 1913-ம் ஆண்டு ராமேசுவரம் பகுதியை சேர்ந்த அந்தோனிப்பிள்ளை பட்டங்கட்டி மற்றும் தொண்டி பகுதியை சேர்ந்த சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகிய இருவரும் இணைந்து கச்சத்தீவில் ஒரு சிறிய குடிசையில் புனித அந்தோனியார் ஆலயத்தை நிறுவினர். கடலில் ஏற்படும் இயற்கைச் சீற்றம், புயல், பேராபத்து ஆகியவற்றில் இருந்து மீனவர்களை காப்பாற்றவும், மீனவர்கள் அனைவருக்கும் பெருமளவு மீன் கிடைக்கவும் இந்த வழிபாடு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள இந்த திருவிழாவுக்கு தமிழகத்தில் இருந்து கச்சத்தீவுக்கு செல்ல 93 விசைப்படகுகளில் 3,496 பேர் செல்லவுள்ளனர். அதேபோல் இலங்கையில் இருந்து பதிவு செய்துள்ள 3,000 பேர் இந்த திருவிழாவில் கலந்து கொள்ளவுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஏற்கனவே அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை இன்றி யாரும் கச்சத்தீவு திருவிழாவுக்கு பயணிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் திருவிழாவில் கலந்து கொள்ளும் இந்திய – இலங்கை பக்தர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம், நெடுந்தீவு மறைமாவட்ட ஆயர் ஆண்டனி ஜெயரஞ்சன் ஆகியோர் கூறியுள்ளனர்.
Chennai Today News: Kachatheevu function starts today