மாநாடு நடத்திய மறுநாளில் பதவியை இழந்த விஜயகாந்த். பெரும் பரபரப்பு
நேற்று முன் தினம் காஞ்சிபுரத்தில் தேமுதிக கட்சித்தலைவர் விஜயகாந்த் திருப்புமுனை மாநாடு ஒன்றை பிரமாண்டமாக நடத்தினார். இந்த மாநாடு யாருக்கு திருப்புமுனையாக இருந்ததோ அவருக்கு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகாலமாக எதிர்க்கட்சி தலைவராக இருந்து வந்த விஜயகாந்த் அந்த பதவியை தற்போது இழந்துள்ளார்.
நேற்று தே.மு.தி.க. கட்சியை சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்கள் திடீரென தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துள்ளதால் போதிய ஆதரவு இல்லாத காரணத்தினால் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழந்தார் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
தே.மு.தி.க. கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக கடந்த சில ஆண்டுகளாக இருந்து வரும் மாஃபா பாண்டியராஜன், தமிழழகன், அருண் சுப்பிரமணியன், அருண் பாண்டியன், மைக்கல் ராயப்பன், சாந்தி, சுந்தரராஜன், சுரேஷ் ஆகியோர் நேற்று தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தனர். மேலுஇம் நிலக்கோட்டை புதிய தமிழகம் எம்.எல்.ஏ. ராமசாமி, அணைக்கட்டு பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ. கலையரசுவும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
ராஜினாமா செய்த 10 எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். தற்போது தமிழக சட்டமன்றத்தில் தற்போது எந்த ஒரு கட்சிக்கும் 24 உறுப்பினர்கள் இல்லை என்பதால் யாரையும் எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிக்கமுடியாது என்றும் சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.