விமானப் பணிப்பெண் போன்று ரயில்களிலும் பணிப்பெண் விரைவில் அறிமுகம்
விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உதவியாக விமானப்பணிப்பெண் நியமனம் செய்யப்படுவது போல் ஒருசில குறிப்பிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் பணிப்பெண்களை அறிமுகப்படுத்த இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது.
முதல்கட்டமாக டெல்லி-ஆக்ரா இடையே விரைவில் இயக்கப்படவுள்ல சொகுசு ரயிலில் ரயில்பணிப்பெண்கள் அமர்த்தப்படவுள்ளனர். கேட்டிமேன் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரை கொண்ட இந்த சொகுசு ரயில் மணிக்கு 160 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகளை மெல்லிய இசைப் பின்னணியில் கையில் ரோஜா மலருடன் இந்த பணிப்பெண்கள் வரவேற்பு செய்வார்கள். மேலும் இந்த ரயிலில் தொலைக்காட்சி வசதி, அறுசுவை உணவு வசதி உள்பட பல வசதிகள் உள்ளது. ஆனால் கட்டணம் மட்டும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை விட 25 சதவீதம் இந்த ரயிலில் கூடுதலாக இருக்கும்.
இந்த ரயிலில் அறிமுகப்படுத்தப்படும் ரயில் பணிப்பெண்களுக்கு இருக்கும் வரவேற்பை அடுத்து சென்னை-ஹைதராபாத், டெல்லி-கான்பூர், டெல்லி-சண்டிகர், நாக்பூர்-பிலாஸ்பூர், கோவா- மும்பை, நாக்பூர்-செகந்திராபாத் ஆகிய வழித்தடங்களிலும் கேட்டி மேன் எக்ஸ்பிரஸ் ரயில்களை பணிப்பெண்களுடன் இயக்க ரயில்வே நிர்வாகம் திட்ட மிட்டுள்ளது.