அப்சல்குருவுக்கு ஆதரவாக கருத்து கூறிய ப.சிதம்பரத்திற்கு பாஜக கண்டனம்
பாராளுமன்றத் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி அப்சல் குருவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
“அப்சல் குரு வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது. பாராளுமன்றம் மீதான தாக்குதலில் அப்சல் குருவுக்கு உள்ள தொடர்பு குறித்தும் மிகப்பெரும் சந்தேகம் உள்ளது. அரசு தரப்பில் என்ன தான் கூறினாலும், நீதிமன்றம் தவறான முடிவு எடுக்கும் போது என்ன செய்ய முடியும். ஏனெனில் அப்சல் குரு அரசால் குற்றம்சாட்டப்பட்டவர். ஆனால் ஒரு தனி மனிதனாக, இந்த வழக்கு சரியாக கையாளப்படவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது” என்று ப.சிதம்பரம் கூறினார்.
அப்சல் குரு குறித்து ப.சிதம்பரம் வெளியிட்ட இந்த கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக தேசிய செயலாளர் ஸ்ரீகாந்த் ஷர்மா ப.சிதம்பரத்தின் கருத்து குறித்து கூறியபோது, “இது மிகவும் துரதிருஷ்டவசமான கருத்து. பாராளுமன்ற தாக்குதலின் போது வீர மரணம் அடைந்த வீரர்களையும் நீதித்துறையையும் இழிவுபடுத்தும் பேச்சு இது” என்று கூறினார்.
ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்த ப.சிதம்பரம், நாடாளுமன்றத்தை தாக்கிய ஒருவருக்கு ஆதரவாகவும், நீதித்துறையின்மீதே குற்றம் சுமத்தும் வகையிலும் பேசிய இந்த பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் அவருக்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றது.