திருச்சி மாவட்டம், லால்குடியில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது பூவாளூர். ஒரு காலத்தில், பூக்கள் நிறைந்த நந்தவனச் சோலையாக இருந்த இடம் என்பதால் பூவாளியூர் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் பூவாளூர் என மருவியதாகச் சொல்வர். புராணத்தில், மன்மதனுக்கும் ரதிதேவிக்கும் ஈசன் ரிஷபாரூடராகக் காட்சி தந்த தலம் என்பதால், இந்த ஊர் மன்மதபுரம் என்றும் அழைக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது ஸ்தல புராணம்.
இந்த ஊரில் அற்புதமாக அமைந்துள்ளது ஸ்ரீகுங்குமசௌந்தரி சமேத திருமூலநாத ஸ்வாமி திருக்கோயில். பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட அற்புதமான ஆலயம். கோயில் நுழைவாயிலில் கிராம தெய்வமான ஸ்ரீவாக்குவாளம்மனைத் தரிசிக்கலாம். ஊரையே கட்டிக் காக்கும் காவல் தெய்வம் இவள் எனப் போற்றுகின்றனர், கிராம மக்கள்.
ஸ்ரீவெள்ளை வாரண விநாயகர், ஸ்ரீவள்ளி- தேவயானை சமேத ஸ்ரீசண்முகர், ஸ்ரீதட்சிணா மூர்த்தி, ஸ்ரீதுர்கை ஆகியோர் தனிச்சந்நிதிகளில் காட்சி தருகின்றனர்.
சிவனாரின் கோபத்தால் மன்மதன் எரிந்து சாம்பலாக, தன் கணவனுக்காக ரதிதேவி கடும் தவம் செய்து பலன் பெற்ற திருத்தலம் இது. எனவே, இதனை ‘ரதிக்குப் பதி அளித்த தலம்’ என்றே ஸ்தல புராணம் தெரிவிக்கிறது. இங்கு வந்து வேண்டிக்கொண்டால், மாங்கல்ய பலம் பெருகும்; நோய் நொடியின்றி, நீண்ட ஆயுளுடன் கணவர் வாழ்வார்; தம்பதி ஒற்றுமை மேலோங்கும் என்பது ஐதீகம்!
ஞானசம்பந்தர், அருணகிரிநாதர், கச்சியப்ப சுவாமிகள் முதலானோர் இந்தத் தலத்துக்கு வந்து இறைவனைத் தரிசித்துப் பாடிப் பரவியுள்ளனர்.
சித்ரா பௌர்ணமி நன்னாளில், திருமூலநாதருக்குத் தயிர் மற்றும் நாட்டுச் சர்க்கரையால் அபிஷேகம் செய்து உட்கொண்டால், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்கின்றனர், பக்தர்கள். மாதந்தோறும் பௌர்ணமி நாளில், சுவாமி மற்றும் அம்பாளுக்கு அர்ச்சனை செய்து தரிசித்து வேண்டினால், திருமணத் தடை அகலும்; விரைவில் கல்யாணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
தை அமாவாசை நாளில் வந்து வணங்கினால், முன்னோர்களின் ஆசீர்வாதமும் இறைவனின் பேரருளும் கிடைக்கும் அற்புதமான தலம் இது என்கின்றனர் ஊர்மக்கள். அந்த நாளில், தர்ப்பணம் செய்துவிட்டு, வெள்ளை வாரண விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலையும், திருமூலநாதருக்கு வில்வ மாலையும் சார்த்தி பிரார்த்தனை செய்தால், பித்ருக்களின் சாபத்தில் இருந்து விடுபடலாம்.
மகா சிவராத்திரி நாளில், சிவனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்த நாளில், ஸ்ரீகுங்கும சௌந்தரி அம்பாளுக்கும் திருமூலநாதருக்கும் அபிஷேகம் செய்து வஸ்திரம் சார்த்தி வழிபட்டால், ஞானமும் யோகமும் பெறலாம்; குடும்பத்தில் நிம்மதியும் அமைதியும் பூத்துக் குலுங்கும்; சந்ததிகள் சிறக்கச் சந்தோஷமாக வாழலாம் என்று பூரிப்புடன் தெரிவிக்கின்றனர், பக்தர்கள்.