மூட விண்ணப்பிக்கும் பொறியியல் கல்லூரிகள்: கலை-அறிவியல் கல்லூரிகள் திறக்க ஆர்வம் அதிகரிப்பு!

dc9a3ffcc7a9c26a44adbdec805f6fcdcoverrathinam

பொறியியல் கல்லூரிகள் கடந்த சில ஆண்டுகளாக மூடப்பட்டு வந்தாலும், புதியதாக கலை-அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுவருகின்றன. 2016-17ஆம் கல்வியாண்டில் புதிய கல்லூரிகள் தொடங்க, 54 விண்ணப்பங்கள் கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
 கணினி அறிவியல் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளின் மீதான ஆர்வம் மாணவர்களிடையே வெகுவாகக் குறைந்து வருகிறது. இதனால், 2013-14ஆம் கல்வியாண்டு முதல் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பொறியியல் இடங்கள் மாணவர் சேர்க்கையின்போது, காலியாகவே இருந்து வருகின்றன. இதனால், பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவதும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மூடப்படும் பொறியியல் கல்லூரி நிர்வாகிகள், கலை-அறிவியல் கல்லூரிகளைத் தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 பொறியியல் மோகம் குறைகிறது!
 பொறியியல் மீதான மாணவர்களுக்கு குறைவதற்கு, கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களே சான்றாக உள்ளன.
 அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, தமிழகத்தில் 2013-14ஆம் கல்வியாண்டில் 565 பொறியியல் கல்லூரிகளில் 2,83,715 பொறியியல் இடங்கள் இருந்தன. இவற்றில் 1,77,110 இடங்களிலே மாணவர் சேர்ந்தனர். 1,06,605 இடங்கள் காலியாக இருந்தன.
 2014-15ஆம் கல்வியாண்டில் 572 பொறியியல் கல்லூரிகளில் 2,94,484 இடங்களில் 1,61,756 இடங்கள் மட்டுமே நிரம்பின. 1,32,728 இடங்கள் காலியாக இருந்தன.
 2015-16ஆம் கல்வியாண்டில் 533 கல்லூரிகளில் 2,85,254 இடங்களில் 1,59,042 இடங்கள் மட்டுமே நிரம்பின. 1,26,212 இடங்கள் காலியாக இருந்தன.
 மூடப்படும் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: ஒரு சில கல்லூரிகளில் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலும், முற்றிலும் மாணவர் சேர்க்கை கூட நடக்காமலும் இருந்துள்ளன. இதனால், தங்களது கல்லூரிகளை மூட அனுமதி கேட்டு ஏஐசிடிஇயிடம் பல பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பித்து வருகின்றன.
 இதில் 2013-14ஆம் கல்வியாண்டில் 3 பொறியியல் கல்லூரிகளும், 2014-15ஆம் கல்வியாண்டில் 12 கல்லூரிகளும், 2015-16ஆம் கல்வியாண்டில் 12 கல்லூரிகளும் மூட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் கூறுகையில்,
 2015-16ஆம் கல்வியாண்டில் கல்லூரியை மூட 30-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் பல்கலைக்கழகத்திடம் தடையில்லாச் சான்றிதழ் பெற்றுச் சென்றன. இவர்களில் சிலர் தாமதமாக ஏ.ஐ.சி.டி.இ.யிடம் விண்ணப்பித்திருந்தால், தாமதமாக அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது.
 2016-17ஆம் கல்வியாண்டிலும் பல கல்லூரிகளை மூடுவதற்கு அனுமதி கேட்டு ஏராளமான கல்லூரிகள் பல்கலைக்கழகத்திடம் தடையில்லாச் சான்றிதழ் பெற்றுச் சென்றுள்ளன. எனவே, வரும் கல்வியாண்டிலும் பல பொறியியல் கல்லூரிகள் மூடப்பட வாய்ப்பு உள்ளது என்றனர்.
 கலை, அறிவியல் கல்லூரிகள் தொடக்கம்: இவ்வாறு பொறியியல், தொழில்நுட்ப கல்லூரிகள் மூடப்பட்டு வரும் நிலையில், 2011-ஆம் ஆண்டு முதல் கலை-அறிவியல் படிப்புகள் மீதான ஆர்வம் மாணவர்களிடையே அதிகரித்துவருகிறது. இதனால், புதிய கலை-அறிவியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான ஆர்வமும் கல்வியாளர்களிடையே அதிகரித்து வருகிறது.
 2015-16ஆம் கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் 60 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதுபோல் 2016-17ஆம் கல்வியாண்டுக்கும் இதே எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வாய்ப்புகள் உள்ளன.
 இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநர் சேகர் கூறியது:
 வரும் கல்வியாண்டில் புதிய கலை-அறிவியல் கல்லூரிகள் தொடங்க 60-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றுள்ளனர். இதுவரை 54 பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

Leave a Reply