பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருந்தால் அவர்களின் குழந்தைகளுக்கும், டைப்-1 சர்க்கரை நோய் வருவதற்கு 30 சதவீதம் வாய்ப்பு உள்ளது என சென்னை மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை தரமணியில் உள்ள வி.எச்.எஸ். மருத்துவமனையில் உலக சர்க்கரை நோய் தினவிழா அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மருத்துவர் ரமேஷ் சந்திரசேகரன் பேசியது:
இந்தியா போன்ற நாடுகளின் வளர்ச்சிக்கு சர்க்கரை நோய் என்பது பெரும் சுமையாகும். டைப்-2 என்று அழைக்கப்படும் சர்க்கரை நோய்க்கு அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், குழந்தைகளுக்கான சர்க்கரை நோயாலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
30 சதவீத வாய்ப்பு: ஒரு தம்பதிக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தால், அவர்களின் குழந்தைக்கு டைப்-1 என்று கூறப்படும் குழந்தைகள் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட 30 சதவீதம் வாய்ப்புள்ளது.
டைப்-1 சர்க்கரை நோய் பாதிப்புள்ள குழந்தைகள் தங்கள் உணவுகளுடன், உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்த வேண்டும். உடற்பயிற்சியின்போது தங்கள் கால்களையும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். தரமான காலணிகளையே அணிய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி முருகன் பேசியது:
கண்டறியப்பட்டது எப்படி? 1881-ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டில் உள்ள இரண்டு மருத்துவர்கள் கணையம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மனிதர்களுக்கு பரிசோதித்துப் பார்க்கும் வழக்கம் கிடையாது. எனவே நாய் ஒன்றுக்கு கணையத்தில் இருக்கும் ரத்தக் குழாய்களை பிரிக்கும் அறுவைச் சிகிச்சையை செய்தனர்.
இரண்டு நாள்கள் கழித்து அவர்கள் சென்று பார்த்தபோது, அந்த நாயின் சிறுநீரில் எறும்புகள் மொய்த்திருந்தன.
அப்போதுதான் சிறுநீரில் சர்க்கரை இருக்கிறதா என்று பரிசோதிக்க ஆரம்பித்தனர். இவ்வாறுதான் சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பது முதன்முதலில் கண்டறியப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சி.வி.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.