ஜெயலலிதா எடுத்த முடிவுக்கு கருணாநிதி திடீர் ஆதரவு.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுதலை செய்ய ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு எடுத்த முடிவை திமுக தலைவர் மு.கருணாநிதி வரவேற்றுள்ளார். ஏழு தமிழர்கள் விடுதலை விஷயத்தில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் தங்கள் கருத்துவேறுபாடுகளை மறந்து ஒரே பாதையில் செல்வது ஆக்கபூர்வமான ஒரு செயலாக கருதப்படுகிறது.
தமிழக அரசு மத்திய அரசுக்கு இதுகுறித்து கடிதம் எழுதியது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் கருணாநிதி, “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 25 ஆண்டுகாலமாக சிறைவாசம் அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்வது என தமிழக அரசு முடிவெடுத்து, அதுகுறித்து மத்திய அரசின் ஆலோசனையைக் கேட்டு, தமிழக அரசின் தலைமைச் செயலாளர், மத்திய உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த 25 ஆண்டு காலமாக சிறையில் வாடும் இந்த 7 பேரும், ஏறத்தாழ இரட்டை ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். மேலும் கடந்த முறை தமிழக அரசு மேற்கொண்ட தவறான அணுகுமுறையால் இவர்களது விடுதலை தள்ளிப்போனது.
தற்போது, தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தின் அடிப்படையில் இந்த 7 பேரையும் விடுதலை செய்ய, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.”
இவ்வாறு மு.கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் வைகோ உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.