ஹயக்ரீவர் ஒரு குறிப்பு

12801524_1512023045773701_5836747208154185127_nபாரிமுகன் இருக்க, பயமேன்?

பரீட்சை நேரம் நெருங்கிவிட்டது. ஆண்டு முழுதும் படித்த பாடம் எல்லாவற்றையும் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும். அப்படி நினைவில் நிற்கும் பாடங்களெல்லாம் சரியான முறையில், அழகான, தெளிவான கையெழுத்தில் விடைகளாக வெளிவர வேண்டும் என்ற எண்ணம், தேர்வினை எதிர்நோக்கும் அத்தனை மாணவ, மாணவிகளுக்கும் நிச்சயம் இருக்கத்தானே செயும். அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற, பரிமுகனான ஸ்ரீஹயக்ரீவரின் வழிபாடு சிறந்தது. சகலவிதமான கலைகளையும், கல்வி என்னும் பெரும் செல்வத்தையும் தன்னகத்தே கொண்டு தம்மை நாடி வருவோருக்கு, ஞாபக சக்தி, வாக்கு வன்மை, புத்தி கூர்மை, சாதுர்யம் என சகலத்தையும் அருள காத்திருக்கிறார் ஹயக்ரீவர்.

திருவஹீந்திரபுரம்:

கடலூருக்கு பக்கத்தில் உள்ள திருவஹீந்திரப்புரத்தில், ஔஷதகிரி எனும் அழகிய சிறிய மலையின் மீது எழுந்தருளியிருக்கிறார் ஸ்ரீஹயக்ரீவர். கருட பகவான், உபதேசம் செய்த ஹயக்ரீவ மந்திரத்தை, ஸ்வாமி தேசிகன் ஜபித்து கொண்டிருக்க, ஸ்ரீஹயக்ரீவர் அவர் முன்னே காட்சி அளித்தார். அந்த நொடியில் உருவானதுதான் ‘ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்.’
‘ஜ்ஞாநாநந்த மயம் தேவம் ‘
என்று தொடங்கும் ஹயக்ரீவ ஸ்துதி. இதை பாராயணம் செய்துவிட்டு செல்பவர்களுக்கு நிச்சயம் பரீட்சை பயம் என்பதே இருக்காது.

கருடனால், கொடுத்தருளப்பட்ட யோகசனத்தில் அமர்ந்திருக்கும் ஹயக்ரீவமூர்த்தியை இன்றும் திருவஹீந்திரபுரத்தில் தரிசிக்கலாம்.

சரியாக வாய் பேச இயலாத பலரும், படிப்பே ஏறாது என முத்திரை குத்தப்பட்டவர்களும் இங்கே வந்து ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவரை தரிசித்து நல்ல வாக்கு வன்மையும், புத்தி கூர்மையும் உடையவர்களாக திகழ்ந்து வருவதை கண்கூடாகப் பார்க்கலாம். இங்கே ஹயக்ரீவருக்கு தேனை சமர்ப்பித்து அந்த தேனை குழந்தைகளின் நாக்கில் தடவி வந்தால், அக்குழந்தை கல்வியிலும் பல கலைகளிலும் சிறந்து விளங்கி வருவதையும் காணலாம். குதிரை முகம் கொண்டருளும் ஹயக்ரீவர், வேகமாக பேசுவதற்கும், வேகமாகவும், விவேகமாகவும் சிந்திப்பதற்கும், செயல்படுவதற்கும் அருளிக் கொண்டிருக்கிறார்.

கல்வியிலும், கலைகளிலும் சிறந்து விளங்க கல்வி கடவுளை மனமொன்றித் தொழுவோம். வாழ்க்கை என்னும் பரீட்சையில் வெற்றியுடன் வலம் வருவோம்!!

Leave a Reply