“ஐஃபோனும்’, அமெரிக்க அரசியலும்

iphone6s-plus-box-gray-2015_GEO_US

ஐந்து அங்குல உயரமும், மூன்று அங்குல தடிமனும் கொண்ட ஓர் “ஐஃபோனை’ மையமாக வைத்துதான் கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் அரசியல் சூறாவளி சுழன்று கொண்டிருக்கிறது.
 தனிமனித உரிமைகளுக்கும், சுதந்திரத்துக்கும் பெயர்போன நாடு அமெரிக்கா. ஓர் “ஐஃபோன்’ ஏற்படுத்திய பிரச்னையால் தனிமனித உரிமைகளா, தேசப் பாதுகாப்பா? இரண்டில் எது முக்கியம் என்ற விவாதம் இப்போது அமெரிக்க அரசியல் களத்தில் முக்கியப் பிரச்னையாகியுள்ளது.
 அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் இருந்துதான் இந்த விவகாரம் தொடங்கியது. கலிஃபோர்னியாவின் சான்பெர்னார்டினோவில் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற, பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட ரிஸ்வான் ஃபரூக் தம்பதி கண்மூடித்தனமாக துப்பாக்கியில் சுட்டதில் 14 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து, அமெரிக்க போலீஸாரால் அத்தம்பதியினர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 இதில், ரிஸ்வான் பயன்படுத்திய “ஆப்பிள் ஐஃபோன்’ மூலம் இந்த சம்பவத்தில் துப்புத்துலக்க அமெரிக்க புலனாய்வு அமைப்பினர் (எஃப்.பி.ஐ.) முயற்சித்தனர். ஆனால், “ஐ-கிளவுட் பாஸ்வேர்டை’ முறியடித்து ஃபோனில் உள்ள, அதில் இருந்து பரிமாறிக்கொள்ளப்பட்ட தகவல்களைப் பெற முடியவில்லை.
 இதையடுத்து, அந்த “ஐஃபோனை’ தயாரித்த ஆப்பிள் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியை எஃப்.பி.ஐ. நாடியது. “ஐஃபோன்’களில் மறையாக்கம் (“என்கிரிப்ஷன்’) செய்யப்பட்ட தகவல்களை தாங்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மென்பொருளைத் தயாரித்துத் தர வேண்டுமென்றும் எஃப்.பி.ஐ. கோரியது.
 இதற்கு ஆதரவாக, நீதிமன்ற உத்தரவும் பெறப்பட்டது. ஆனால், “ஐஃபோன்’களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதில் வைத்துள்ள ரகசியத் தகவல்களைப் பாதுகாக்கும் பொறுப்பு எங்கள் நிறுவனத்துக்கு உண்டு. எந்த வகை “ஐஃபோன்’களிலும் உள்ள தகவல்களை எஃப்.பி.ஐ. தெரிந்து கொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டால், நிறுவனத்தின் நம்பகத்தன்மை பெரிதும் பாதிக்கப்படும் என்று கூறி அந்த கோரிக்கையை ஏற்க ஆப்பிள் நிறுவனம் மறுத்துவிட்டது.
 இப்போது விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளது. விசாரணை அமைப்புகள் தங்களுக்கு உதவுமாறு தனியார் நிறுவனங்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்ற சட்டப் பிரிவையும் ஆப்பிள் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
 இதைத் தொடர்ந்து, தனியுரிமை காக்கப்படுவதற்கு ஆதரவாகவும், தேசப் பாதுகாப்புதான் முக்கியம் எனவும் இரு பிரிவாக அமெரிக்காவில் இரு அணிகள் திரளத் தொடங்கியுள்ளன.
 முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அதிகாரிகள் ஆப்பிள் நிறுவனத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், அரசியல்வாதிகள் பலர் தேசப் பாதுகாப்பு என்று வரும்போது தனியுரிமை பாதுகாப்பை விட்டுக் கொடுக்கலாம் என்று வாதிட்டு வருகின்றனர்.
 முக்கியமாக, கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க் ஆகியோர் ஆப்பிள் நிறுவனத்துக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், அமெரிக்க அரசுக்கு ஆப்பிள் நிறுவனம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென்று ஃமைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கூறியுள்ளார்.
 இந்த விவகாரத்தை முழுமையாக விசாரித்து முடிவை அறிவிக்க அரசு ஒரு விசாரணைக் குழு அமைக்க வேண்டுமென்று கோரியுள்ளார் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக். இது தவிர, வாடிக்கையாளர்கள், பொதுமக்களின் ஆதரவைத் திரட்டும் வகையில், “அரசின் உத்தரவை ஏற்க ஆப்பிள் நிறுவனம் தயங்குவதற்கான காரணங்கள்’ என்ற தலைப்பில் ஆப்பிள் நிறுவனம் தனது இணையதளத்தில் பக்கம் பக்கமாக விளக்கமளித்துள்ளது.
 முக்கியமாக, மறையாக்கம் (“என்கிரிப்ஷன்’) செய்யப்பட்ட தகவல்களைத் தெரிந்து கொள்ளும் வகையில் புதிய மென்பொருளைத் தயாரித்து தங்களுக்குத் தர வேண்டுமென்று எஃப்.பி.ஐ. கோருகிறது. இது மிகவும் அபாயகரமான விஷயம். இதன் மூலம் எந்த “ஐஃபோனில்’ உள்ள தகவல்களையும் அவர்கள் எளிதாக எடுத்துவிட முடியும்.
 எனவே, வாடிக்கையாளர்கள் தங்கள் “ஐஃபோன்’களில் உள்ள ரகசியங்களைக் காப்போம் என்ற எங்கள் நிறுவனத்தின் முக்கிய வாக்குறுதிக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறியுள்ளது.
 பயங்கரவாதி பயன்படுத்திய “ஐஃபோனில்’ மட்டும் புதிய மென்பொருளைப் பயன்படுத்துவோம். அதன் பிறகு அதனை அழித்துவிடலாம் என்று எஃப்.பி.ஐ. கூறுவதை ஏற்க ஆப்பிள் நிறுவனம் தயாராக இல்லை.
 இதனிடையே, அமெரிக்காவில் இப்போது அதிரடி அரசியல்வாதியாக உருவெடுத்துள்ளவரும், அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளர் போட்டியில் முன்னணியில் உள்ள குடியரசுக் கட்சியின் முன்னணித் தலைவருமான டொனால்ட் டிரம்ப் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தார்.
 “ஆப்பிள் நிறுவனம் அமெரிக்க அரசுக்கு ஒத்துழைக்கும் வரை அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை அமெரிக்க மக்கள் அடியோடு புறக்கணிக்க வேண்டும்’ என்று அவர் கூறியுள்ளது ஆப்பிள் நிறுவனத்துக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
 அதேநேரத்தில், டொனால்ட் டிரம்ப்பின் ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிரான இந்தக் கருத்தும், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் “ஆப்பிள் ஐஃபோன்’ மூலமாகத்தான் அவரது ஆதரவாளர்களால் பகிரப்பட்டது என்பது நகைமுரண்.
 

Leave a Reply