மக்கள் நலக்கூட்டணியை நோக்கி விஜயகாந்த். தமிழக அரசியலில் திடீர் திருப்பம்

மக்கள் நலக்கூட்டணியை நோக்கி விஜயகாந்த். தமிழக அரசியலில் திடீர் திருப்பம்
vijayakanth
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் கூட்டணி குறித்து இறுதி முடிவு அறிவிக்கப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார். ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நான்கு நாட்கள் ஆகியும் இதுவரை தெளிவு இல்லாமல் இருந்த விஜயகாந்த் தற்போது மக்கள் நலக்கூட்டணி மீது தனது பார்வையை அழுத்தமாக பதிவு செய்திருப்பதாகவும், இதுகுறித்து பிரபல சிமெண்ட் அதிபர் ஒருவர் விஜயகாந்துடனும் மக்கள் நலக்கூட்டணியின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

திமுகவுடன் தான் தேமுதிக கூட்டணி, 59 தொகுதிகள் ஒதுக்கியாகிவிட்டது என கடந்த சில நாட்களாக வெளிவந்த வதந்தியை தேமுதிக உறுதியாக மறுத்துள்ளது. அதே நேரத்தில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதையும் கிட்டத்தட்ட விளக்கிவிட்டது. இதனால்தான் நேற்று தமிழிசை செளந்திரராஜன் பாஜக 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயார் என அறிவித்தார்.

இந்நிலையில் மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்த் சேரவிருப்பதாகவும், விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க மக்கள் நலக்கூட்டணி தயாராகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மக்கள் நலக்கூட்டணியில் கிட்டத்தட்ட பாதி தொகுதிகளில் தேமுதிக போட்டியிடும் என்றும் விஜயகாந்த் சேர்ந்துவிட்டால் தமிழ் மாநில காங்கிரஸும் இந்த கூட்டணியில் சேர தயார் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது ஒருவேளை உண்மையானால் திமுக கூட்டணியும், பாஜகவும் தனித்துவிடப்படும் என்றும் உண்மையான போட்டி அதிமுகவுக்கும் மக்கள் நலக்கூட்டணிக்குமே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply