துருக்கி நாட்டின் பிரபல பத்திரிகை திடீர் முடக்கம். பான் கீ மூன் கண்டனம்
துருக்கி நாட்டின் அரசை தொடர்ந்து விமர்சித்த வந்த ‘ஸமான்’ என்ற நாளிதழை துருக்கி அரசு திடீரென அரசுடமை ஆக்கிக்கொண்டது. இதனால் அந்த நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துருக்கி அரசின் இந்த நடவடிக்கை துருக்கியின் எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி உலக நாடுகளும் கண்டித்துள்ளது.
துருக்கியின் தின நாளிதழான ‘ஸமான்’ என்ற பத்திரிகை கடந்த சில வருடங்களாக துருக்கி அரசினை கடுமையாக விமர்சனம் செய்தும், துருக்கி அதிபர் தய்யிப் எர்டோகன் செயல்பாடுகளை தொடர்ந்து கண்டித்து வருவதோடு, அமெரிக்காவை சேர்ந்த இஸ்லாமிய அறிஞருமான ஃபெத்துல்லா குலேன் என்பவரை ஆதரித்தும் எழுதி வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த துருக்கி அரசு, ‘ஸமான்’ நாளிதழை கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தின் உத்தரவின்படி அரசு கையகப்படுத்திக் கொண்டது.
துருக்கியின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா பொதுச்செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஐ.நா. சபை செய்திதொடர்பாளர் ஃபர்ஹான் ஹக் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: துருக்கியில் நடந்துவரும் சம்பவங்களை மிக நெருக்கமாக பான் கி மூன் கவனித்து வருகிறார். எவ்வித நடவடிக்கையானாலும், கருத்து சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும். கடுமையான விமர்சனங்களாக இருந்தாலும், அமைதியாக வெளியிடப்படும் கருத்துகள் மற்றும் குரல்களைச் சார்ந்தே ஒரு நாட்டில் வலுவான ஜனநாயகம், பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றம் ஏற்படும்’ என பான் கி மூன் சுட்டிக்காட்டி உள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.