ரூ.20 உதவிய இளைஞருக்கு ரூ.1 கோடி பரிசு. கேரளாவில் ஒரு சுவையான சம்பவம்
ஊனமுற்ற நபர் ஒருவருக்கு வெறும் இருபது ரூபாய் கொடுத்து உதவிய இளைஞர் ஒருவருக்கு லாட்டரியில் ரூ. 1 கோடி பரிசு விழுந்துள்ளது.
இந்த சுவாரசியமான சம்பவம் பின்வருமாறு: கேரளாவில் உள்ள கோழிக்கோடு என்ற பகுதியில் கட்டிட கூலி வேலை செய்து வருபவர் ஷேக் என்னும் 22 வயது இளைஞர். வறுமையில் இருந்தாலும் பிறருக்கு உதவி செய்யும் நல்ல பண்பு உடையவராம் இவர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் தனது சம்பளப் பணத்தை வாங்கிவிட்டு தான் தங்கியிருந்த அறைக்கு ஷேக் சென்றுகொண்டிருந்தபோது எதிரே ஒரு ஊனமுற்றவரை பார்த்து அவருக்கு ரூ.20 கொடுத்து உதவியுள்ளார். லாட்டரி சீட்டு விற்கும் அந்த ஊனமுற்ற நபர் ரூ.20க்கு பதிலாக ஒரு லாட்டரி டிக்கெட்டை கொடுத்துள்ளார்.
மறுநாள் அந்த சீட்டுக்கு ரூ.1 கோடி பரிசு விழுந்ததை அறிந்து இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். பரிசு விழுந்த தகவல் கிடைத்ததும் உடனே காவல்நிலையத்திற்கு சென்ற ஷேக், தனக்கும் தன்னுடைய லாட்டரி சீட்டுக்கும் பாதுகாப்பு கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து தகுந்த பாதுகாப்பு கொடுத்த போலிஸார் அவரை வங்கிக்கு அழைத்து சென்று அவருடைய பரிசுத்தொகையை டெபாசிட் செய்ய உதவி செய்தனர். உதவி செய்யும் நோக்கத்தில் ரூ.20 கொடுத்த இளைஞருக்கு பரிசாக ரூ.1 கோடி கிடைத்ததை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பேசி வருகின்றனர்.