விலங்குகளுக்கும் செல்பி வசதி. கூகுள் செய்த சிறப்பு ஏற்பாடு
கேமரா மொபைல் அறிமுகம் ஆனதில் இருந்தே உலகம் முழுவதும் செல்பி மோகம் அதிகரித்துள்ளது. ஆபத்தான இடங்களில் செல்பி எடுத்து உயிரை இழந்து வரும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் செல்பி எடுத்து கொள்ள வசதியாக கூகுள் நிறுவனம் அமெரிக்காவில் ஒரு ஏற்பாட்டை செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் அரிய வகை விலங்குகள் உள்ளன. இந்த பூங்காவில் கூகுள் நிறுவனத்தினர் மோஷன் சென்சார்கள் பொருத்தப்பட்ட கேமராக்களை ஆங்காங்கே பொருத்தி வைத்துள்ளனர். இந்த கேமராக்களின் அருகே விலங்குகள் வரும்போது கேமராவில் உள்ள சென்சார்கள் செயல்பட்டு விலங்குகளை புகைப்படம் எடுக்கின்றன.
இந்த புகைப்படங்கள் மிகவும் வித்தியாசமான கோணங்களில் விலங்குகளை காண உதவுவதாகவும், இந்த புகைப்படங்களை சேகரித்து விரைவில் கண்காட்சி ஒன்றை நடத்தவுள்ளதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது. மனிதர்களை ஆட்டிப்படைக்கும் செல்பி மோகம் இனி விலங்குகளையும் பிடித்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.