எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்கள் தத்கல் திட்டத்தில் வரும் 11, 12-ஆம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்களிடம் இருந்து தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தத் திட்டத்தில், ஏப்ரல் 1-ஆம் தேதி அன்று பன்னிரண்டரை வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். இவர்கள் மார்ச் 11, 12 ஆகிய 2 நாள்களில் மட்டும் www.tndge.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
தேர்வுக் கட்டணமாக ரூ.125, சிறப்புக் கட்டணமாக ரூ.500 என மொத்தம் ரூ.625-ஐ சேவை மையங்கள் மூலமாக செலுத்தலாம். விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழின் நகல், பிறப்புச் சான்றிதழின் நகல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை இணைக்க வேண்டும். மேலும், ரூ.40-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட, சுய முகவரியிட்ட உறை ஒன்றையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
ஆன்லைன் மூலமாகப் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் விவரங்களை www.tndge.in என்ற இணையதளத்தில் காணலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.