திமுகவுடன் கூட்டணி சேர விஜயகாந்த் தயங்குவது ஏன்? ஒரு விரிவான அலசல்

திமுகவுடன் கூட்டணி சேர விஜயகாந்த் தயங்குவது ஏன்?
vijayakanth
வரும் சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் என்ன முடிவெடுப்பார் என கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் உற்று நோக்கி வரும் நிலையில் விஜயகாந்த் இப்போது வரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பதையே தேமுதிக வட்டாரங்கள் கூறி வருகின்றன.

விஜயகாந்துக்கு அதிமுக தவிர அனைத்து கூட்டணியும் அழைப்பு விடுத்துள்ளன. திமுக தலைவர் கருணாநிதி பழம் கனிந்துவிட்டது பாலில் விழவேண்டியதுதான் பாக்கி என்று கூறியுள்ளதன் மூலம் கூட்டணி பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவே கருதும்படி உள்ளது.

ஆனாலும் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் இன்னும் விஜயகாந்த் நம் பக்கம் வருவார் என நம்பிக்கையுடன் காத்திருக்கின்றன. முதல்வர் வேட்பாளர், தேர்தல் செலவுக்கு பணம், ஒரு மத்திய அமைச்சர் பதவி ஆகியவை தருவதாக பாஜக தரப்பில் இருந்து கூறப்பட்டாலும் தேமுதிக பாஜக கூட்டணியை விரும்பவில்லை என்றே தெரிகிறது. பாஜக-தேமுதிக கூட்டணி படுதோல்வி அடைந்துவிட்டால் அதனால் பாஜகவுக்கு எவ்வித நஷ்டமும் இல்லை. ஆனால் தேமுதிக கட்சியின் நிலைமை பரிதாபமாக மாறிவிடும்.

அதே நேரம் மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி வைத்தால் அதிமுக, திமுக என இரண்டு பிரமாண்ட கட்சிகளை சமாளிக்க வேண்டிய நிலை வரும். மேலும் பொருளாதார ரீதியிலும் எந்த உதவியும் கிடைக்காது.

ஆக விஜயகாந்துக்கு தற்போது இருக்கும் ஒரே வழி திமுக கூட்டணிதான் என கூறப்படுகிறது. ஆனால் திமுகவுடன் கூட்டணி வைத்தால், அதிமுக, திமுகவுக்கு ஒரு மாற்று கட்சி தேமுதிக என இனிமேல் கூற முடியாது. கடந்த தேர்தலில் அதிமுகவுடனும், இந்த தேர்தலில் திமுகவுடனும் கூட்டணி வைத்துவிட்டு இந்த இரண்டு கட்சிகளையும் விமர்சனம் செய்தால் மக்களின் நம்பிக்கையை இழந்ததாக கருதப்படும். இதுவே விஜயகாந்த்தின் தயக்கத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.

இந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி அல்லது தனித்து நின்றால் இந்த தேர்தலில் அவர் வெற்றி பெற முடியாவிட்டாலும், திமுக, அதிமுகவுக்கு மாற்று தேமுதிக என மக்களுக்கு ஒரு நம்பிக்கை வரும். அந்த நம்பிக்கை அடுத்த தேர்தலுக்கு கைகொடுக்கும். கேப்டன் என்ன முடிவெடுக்கின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply