ஓட்டுக்கு மட்டுமா பணம்? டிவி சேனலை பார்த்தாலும் பணமாம்
தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது போல தங்களுடைய சேனலை பார்க்க வேண்டும் என ஒரு பிரபல தொலைக்காட்சி நேயர்களுக்கு பணம் கொடுத்ததாக வெளிவந்த புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு தொலைக்காட்சி சேனல்கள் இருப்பதால் அவற்றுக்குள் போட்டியும் அதிகமாக உள்ளது. தங்கள் சேனலை பார்க்க சுவாரஸ்யமான விறுவிறுப்பான நிகழ்ச்சிகளை சேனல்கள் மூளையை கசக்கி உருவாக்கி வரும் நிலையில் பழமையான தென்னிந்திய சேனல் ஒன்று குறுக்கு வழியில் நேயர்களுக்கு பணம் கொடுத்து தங்கள் சேனலை மட்டும் பார்க்க அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் தொலைக்காட்சி பார்க்கும் நேயர்களின் எண்ணிக்கையை குறிக்கும் வகையில் அதன் மதிப்பீடுகளை பார்க் என்ற அமைப்பு தொகுத்து வருகிறது. இந்த மதிப்பீடுகள் தொலைக்காட்சி சேனல்களுக்கு விளம்பரம் அதிகம் கிடைக்க உதவுவதால் இந்த அமைப்பில் கிட்டத்தட்ட 98 சதவீத சேனல்கள் உறுப்பினராக உள்ளது. மேலும் தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் அளிக்கும் முக்கிய நிறுவனங்களும், விளம்பர ஏஜன்ஸிகளும் இதில் உறுப்பினர்களாக இருப்பதால் ‘பார்க்’ தரும் மதிப்பீடுகளுக்கு மிகுந்த வரவேற்பு இருக்கும்.
இந்நிலையில் தென்னிந்தியாவில் மிகவும் புகழ் பெற்றிருக்கும் ஒரு சேனல் பார்க் நிறுவனம் அளவீட்டு கருவிகள் அமைந்த வீடுகளை கண்டுபிடித்து அந்த வீடுகளில் உள்ள நேயருக்கு பணம் கொடுத்து தங்கள் சேனலை மட்டும் பார்க்க அறிவுறுத்தியுள்ளதாக அதன் போட்டி சேனல் ‘பார்க்’ அமைப்புக்கு புகார் அளித்துள்ளது. இந்த புகார் மீது விசாரணை நடந்து வருவதாகவும், இந்த புகாரில் உண்மை இருப்பது தெரியவந்தால், அந்த தொலைக்காட்சி சேனல் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.