விஜயகாந்த் தலைமையை மக்கள் நலக்கூட்டணி ஏற்காது. வைகோ அறிவிப்பால் பரபரப்பு
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனித்து போட்டி என்று அறிவித்தாலும் தன்னை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகள் தனது தலைமையிலான கூட்டணியில் இணைந்து கொள்ளலாம் என அறிவித்தார். ஆனால் இதுவரை எந்த கட்சியும் விஜயகாந்த் தலைமையை ஏற்க தயாராக இல்லாத நிலையில் மக்கள் நலக்கூட்டணியும் தேமுதிகவின் தலைமையை ஏற்க தயாராக இல்லை என இன்று அறிவித்துவிட்டதால் விஜயகாந்த் கட்சிக்கு பெரும் பின்னடைவு கிடைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
திருச்சியில் இன்று மதிமுக நிர்வாகிகளின் கூட்டத்தில் கலந்து கொண்ட வைகோ, ‘மக்கள் நலக் கூட்டணிக்கு தேமுதிக வந்தாலும், கூட்டணிக்கு தலைமையேற்கும் வாய்ப்பில்லை என்றும், முதல்வர் வேட்பாளரை தேர்தலுக்கு முன்னர் அறிவிக்கும் திட்டம் எதுவும் மக்கள் நலக்கூட்டணியிடம் இல்லை என்றும் தெளிவுற கூறிவிட்டார். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் மேலும் வைகோ கூறியதாவது: எங்கள் கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று இப்போது கூறமாட்டேன். ஆனால் தமிழகத்தில் மக்கள் நல கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். முதல் அமைச்சர் யார் என இப்போது கூற தேவையில்லை. இதனால் பின்னடைவு ஏற்படாது. 1967 ல் திமுக போட்டியிட்டபோது முதல் அமைச்சர் வேட்பாளர் குறித்து அறிவிக்கவில்லை.
மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் வந்தால் தேமுதிக தலைமையில் கூட்டணி அமையுமா? என்றால் வாய்ப்பில்லை. மக்கள் நலக்கூட்டணி தொடங்கப்பட்டு மக்கள் மத்தியில் நன்றாக பதிவு செய்யப்பட்டு விட்டது. எங்கள் கூட்டணி விமானம் நன்றாக ‘டேக்ஆப்’ ஆகிவிட்டது. மக்கள் நல கூட்டணியின் செயல் திட்டங்கள் மக்கள் மனதை நன்றாக சென்றடைந்து விட்டது.
மக்கள் நலக்கூட்டணிக்கு வருமாறு ஜி.கே.வாசனையும் ஏற்கனவே நாங்கள் அழைத்துள்ளோம். 1996 ல் திமுக- தமாகா கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்ததால் தான் மதிமுக விற்கு பின்னடைவு ஏற்பட்டது. எனவே இந்தத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தரவேண்டும் என்ற கேள்விக்கு நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை’ இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.