அமெரிக்காவில் உள்ள வடகொரிய அரசின் சொத்துக்கள் முடக்கம். ஒபாமா அதிரடி உத்தரவு
வடகொரியா நாடு தனது அண்டை நாடான தென்கொரியாவை மட்டுமின்றி அமெரிக்கா உள்பட பல உலக நாடுகளை அணுகுண்டுகள் மூலம் பயமுறித்தி வரும் நிலையில் வடகொரியாவுக்கு பாடம் புகட்ட தற்போது அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதன் முதல்படியாம அந்நாட்டின் மீது புதிய பொருளாதார தடைகளை அமெரிக்க அதிபர் ஒபாமா விதித்தார். அவருடைய உத்தரவில் * அமெரிக்காவில் உள்ள வடகொரிய அரசின் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படும் என்றும், வடகொரியாவில் அமெரிக்காவின் ஏற்றுமதிகளுக்கு தடை விதிப்பது என்றும், வடகொரியாவில் அமெரிக்கா முதலீடு செய்ய தடை செய்வது என்றும், வடகொரியாவுடன் தொடர்பு வைத்துள்ள எந்தவொரு நபர்மீதும், அவர் அமெரிக்கர் அல்லாதவராக இருந்தாலும் அவர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த அதிபர் ஒபாமா, “வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள தடை அந்த நாட்டு மக்களை குறிவைத்து பிறப்பிக்கப்படவில்லை. ஆனால் அது அந்த நாட்டின் தலைமை மீதுதான் குறிவைத்து பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
அமெரிக்க அதிபர் மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் இதுகுறித்து கூறும்போது, “வடகொரியாவின் சட்டவிரோத அணு ஆயுத சோதனைகளையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளையும் அமெரிக்காவும், உலக சமுதாயமும் பொறுத்துக்கொள்ளாது. அதற்கான விலையை (தண்டனையை) வடகொரியாவுக்கு அளித்துக்கொண்டே இருப்போம். சர்வதேச உடன்படிக்கைகளை அந்த நாடு மதித்து நடக்கத் தொடங்குகிற வரையில் இந்த தடைகளும் தொடரும்” என்று கூறினார்.