செல்வத்தின் அம்சமாக இருந்து, நம் பாவ, புண்ணியத்திற்கேற்பவும், விதிப்பலனுக்கேற்பவும் செல்வத்தை வழங்கும் அவளுக்கு நன்றி தெரிவிக்கும் விரதமே வரலட்சுமி விரதம் ஆகும். நித்தியசுமங்கலியான மகாலட்சுமி பொறுமையே வடிவானவள். கணவரின் இதயத்தில் குடியிருக்கும் இவள், பெண்களை துன்பங்களில் இருந்து காப்பவளாக திகழ்கிறாள். மஞ்சள் நிற பட்டு அணிந்திருக்கும் இவள் கருணை, அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியாவாள்.
அதர்வண வேதத்தில் லட்சுமி, அனைவருக்கும் நன்மை தருபவள் என்று கூறப்பட்டுள்ளது. பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பதால், அஷ்ட லட்சுமிகளும் மகிழ்வதாக ஐதீகம். இதனால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். திருமணதோஷம் உள்ள கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். செல்வம், தான்யம், தைரியம், வெற்றி, வீரம், புத்திர பாக்கியம், கல்வி போன்ற செல்வங்கள் அனைத்தும் கிடைக்கும். வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள், லட்சுமியை பூஜிக்கும் போது அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிப்பது நல்லது.
இதனால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பர். வரலட்சுமி விரதத்தன்று, புண்ணய நதிகளில் நீராடுவது, ஒரு வருடம் தொடர்ந்து வரலட்சுமி விரதம் இருப்பதற்கு ஒப்பான பலன்களைத் தரும். கங்கை, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய நதிகளில் அன்று நீராடினால் செல்வச்செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை. புகுந்த வீட்டு உறவினர்களை மதித்து நடக்கும் பெண்கள், வரலட்சுமி விரதம் இருந்த பலன்களை பெறுவதாக ஐதீகம்.
மகத நாட்டில் வசித்த சாருமதி என்ற பெண்ணை அவளது பெற்றோர் மண முடித்துக் கொடுத்தனர். புகுந்த வீட்டில் கணவன், மாமனார், மாமியார், உறவினர்கள் என அனைவரையும், அவள் சொந்தமாக பார்க்காமல், கடவுளின் வடிவமாகவே பாவித்து, பணிவிடை செய்தாள். இதனால், அவள் வரலட்சுமி விரதம் இருந்த பலனை பெற்றாள். தன் கணவனுடன் நீண்ட காலம் தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்தாள்.