வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜெயலலிதா-ஓபிஎஸ் திடீர் சந்திப்பு.
கடந்த இரண்டு நாட்களாக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவருடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், விரைவில் அவர் கைது செய்யப்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் ஊடகங்களின் மத்தியில் செய்திகள் வெளிவந்த நிலையில் நேற்று மாலை ஜெயலலிதாவை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட பலர் ஓ.பன்னீர்செல்வம் விஷயத்தில் என்ன நடக்கின்றது என்பதை விளக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த் நிலையில் எதிர்க்கட்சிகளின் வாயை அடைப்பதற்காகவே இந்த சந்திப்பு நடந்ததாக அதிமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடந்ததாகவும் கூறப்படினும் இந்த சந்திப்பு எதற்காக நடந்தது என்பது குறித்து அதிமுக வட்டாரம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் தேர்தல் முடியும் வரை அவர் மீது எவ்வித நடவடிக்கையும் இருக்காது என்றே இப்போதைய அதிமுக நிலை என தெரிகிறது.