ஆஸ்திரேலியா: 6 மாதத்திற்கு முன்பே தேர்தல் நடத்த பிரதமர் அதிரடி திட்டம்
ஆஸ்திரேலிய பாரளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி வரை இருக்கின்ற போதிலும் முன்கூட்டியே அதாவது ஜூலை மாதம் 2ஆம் தேதியே தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவில் இன்னும் ஒருசில நாட்களில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய பிரதமராக கடந்த ஆண்டு பதவியேற்ற ‘கன்சர்வேடிவ் லிபரல் தேசிய கூட்டணியின் மால்கம் டர்ன்பல் அவர்களுக்கு பாராளுமன்றத்தில் சிறிய கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகின்றது. இதன் காரணமாக அவரால் பல்வேறு சீர்திருத்த மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை.
எனவே தற்போதைய பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தலை நடத்த அவர் முடிவு செய்துள்ளார். இதன்படி ஆஸ்திரேலியாவில் வரும் ஜூலை 2ஆம் தேதி பொதுத்தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய பிரதமர் மால்கம் டர்ன்பல், ‘அரசியல் நாடகங்கள் அனைத்தும் முடிவுக்கு வரும் நேரம் இது. செனட் சபையில் முட்டுக்கட்டைக்கு பதிலாக சட்டம் இயற்றுவதற்கு இது ஒரு சரியான வாய்ப்பு. முக்கியமான மசோதாக்களுக்கு தடை போடும் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும்’ என்று கூறினார்.
ஆஸ்திரேலிய மக்களிடையே மால்கம் டர்ன்பல்லின் செல்வாக்கு தற்போது சரிந்து வருவதாக கூறப்படும் நிலையிலும் முன்கூட்டியே தேர்தல் நடவடிக்கை எடுத்து இருக்கும் துணிச்சலான முடிவு ஆச்சரியத்தை அளிப்பதாக பொதுமக்களிடையே கருத்து நிலவி வருகிறது.
Chennai Today News: Australian PM Malcolm Turnbull paves way for early election