பாதுகாப்பற்ற குடிநீர்: உலக அளவில் முதலிடம் பெற்ற இந்தியா
நேற்று உலகம் முழுவதும் ‘உலக தண்ணீர் தினம்’ அனுசரித்த நிலையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த ‘வாட்டர் எய்டு (Water Aid) என்ற அமைப்பு உலகில் பாதுகாப்பான குடிநீர் கிடைக்கும் நாடுகள் எவை என்பது குறித்து ஆய்வு செய்து அந்த ஆய்வின் முடிவை நேற்று வெளியிட்டது. இந்த ஆய்வில் துரதிஷ்டவசமாக இந்தியா கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது., அதாவது பாதுகாப்பற்ற குடிநீர் கிடைக்காத நாடுகளில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது.
இதுகுறித்து ‘வாட்டர் எய்டு’ வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளதாவது: உலகிலேயே அதிகமான மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காத நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இந்தியா உள்ளது. அதற்கடுத்த இடங்களில் சீனாவும், நைஜீரியாவும் உள்ளன. பாகிஸ்தான் 10-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவில் 7.6 கோடி பேருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை. அத்தகைய மக்களுக்கு, குடிநீர் வியாபாரியிடம் இருந்து தண்ணீர் வாங்குவதற்கான வாய்ப்பு இருந்தால், ஒரு லிட்டர் நீருக்கு 1 ரூபாய் செலவிட வேண்டி வரும்.
சில நேரங்களில் தண்ணீர் பற்றாக்குறையை பொருத்து, இந்தத் தொகை இரட்டிப்பாகும். இந்தியாவில் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காததற்கு முக்கிய பிரச்னையே நீர் வளங்களை முறையாக பராமரிக்காததுதான். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் அதிக மக்களுக்கு பாதுகாப்பற்ற குடிநீர் கிடைக்காத நாடு இந்தியா என்று அந்த நிறுவனம் கூறியிருந்தாலும், இந்தியாவில் 7.6 கோடி பேருக்கு மட்டுமே பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 127 கோடி என்ற நிலையில் 7.6 கோடி பேர் தவிர மீதியுள்ள 120 கோடி மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைத்து வருகிறது என்பது நமக்கு பெருமையே. சதவீதப்படி பார்த்தால் 10%க்கும் குறைவான மக்களுக்கே பாதுகாப்பான குடிநீர் இல்லை என்பது பொருள். எனவே வாட்டர் எய்டு ஆய்வறிக்கை குறித்து இந்தியா கவலைப்பட தேவையில்லை என பாதுகாப்பு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.