ராமேசுவரம் மீனவர்கள் 40 பேருக்கு காவல் நீட்டிப்பு. இலங்கை நீதிமன்றம் அதிரடி
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சிங்கள படையினரால் கைது செய்யப்பட்டு வவுனியா சிறையில் இருக்கும் 40 ராமேஸ்வர மீனவர்களுக்கு இன்றுடன் காவல் முடிவடைவதால் இந்த 40 மீனவர்களும் இன்று விடுதலை ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களை மீண்டும் ஏப்ரல் 4ஆம் தேதி வரை காவலில் வைக்க மன்னார் நீதிமன்ற நீதிபதி இன்று உத்தரவிட்டுள்ளதால் ராமேஸ்வரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மன்னார் நீதிபதியின் உத்தரவை அடுத்து 40 ராமேஸ்வர மீனவர்கள் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் வாடும் மீனவர்களை விடுவிக்க மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று ராமேஸ்வர மீனவர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த 40 மீனவர்களை தவிர மேலும் 50 மீனவர்கள் என மொத்தம் 90 மீனவர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும், சிங்கள ராணுவத்தினரால் ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் மீனவர்களை கைது செய்யப்படுவது வாடிக்கையாகி வருகிறது என்றும் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.