டாப் 100 உலக பிரபலங்கள் யார் யார்? போட்டியில் மோடி, பிரியங்கா சோப்ரா
உலக அளவில் செல்வாக்கு உடைய 100 பேர் கொண்ட பட்டியல் ஒன்றை எடுக்க பிரபல பத்திரிகை டைம் முடிவு செய்து அதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் 127 பிரபலமானவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ள டைம் இதழ், அதற்கான வாக்குப்பதிவையும் தொடங்கியுள்ளது. இந்த பட்டியலின் முடிவு அடுத்த மாதம் வெளியாகும்.
இந்த பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
இவர்கள் மூவர் குறித்து டைம் பத்திரிகை குறிப்பிட்டுள்ளதாவது: உலக மேடையில் பிரதமர் நரேந்திர மோடியின் குரல் இன்னும் சக்தி வாய்ந்ததாக ஒலித்துக் கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளது. மேலும் கடந்த ஆண்டு டைம் இதழ் வெளியிட்ட 100 பேரின் பட்டியலிலும் பிரதமர் மோடி இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல சானியா மிர்சா பற்றி கூறியுள்ளதாவது: இந்தியாவின் மிகச் சிறந்த டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை, தனது தாய் நாட்டில் பல பெண் வீராங்கனைகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்பவர் என்று குறிப்பிட்டுள்ளது.
நடிகை பிரியங்கா சோப்ரா குறித்து தெரிவித்துள்ளதாவது: பாலிவுட்டில் மிக அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகை என்றும் உலக அளவில் பிரபலமானவர் என்றும் கூறியுள்ளது.
மேலும் இந்த பட்டியலில், வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர். கூகுள் நிர்வாகி சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிர்வாகி சத்யா நாடெல்லா ஆகியோரும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.