எகிப்து விமானம் தீவிரவாதிகளால் கடத்தல். 80 பயணிகளின் கதி என்ன?
எகிப்து நாட்டின் பயணிகள் விமானம் ஒன்று தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருப்பதாகவும் அந்த விமானத்தில் சுமார் 80 பயணிகள் இருந்ததாகவும், அவர்களுடைய கதி என்ன என்று தெரியவில்லை என்றும் திடுக்கிடும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
தீவிரவாதிகளின் மனித வெடிகுண்டு காரணமாக சமீபத்தில் பெல்ஜியம், ஈராக் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் தாக்குதல் நடைபெற்று ஏராளமானோர் பலியாகிய அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீள முடியாத நிலை இருந்து வரும் நிலையில் இன்று காலை எகிப்து விமானம் ஒன்று தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளது. கடைசியாக கிடைத்த தகவலின்படி அந்த விமானம் சைப்ரஸ் நாட்டில் தரையிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பயணிகள் விமானத்தை ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என்றும், விமானத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. எகிப்து நாட்டின் அலெக்சாண்ட்ரியாவில் இருந்து கெய்ரோ நகருக்குச் சென்று கொண்டிருந்த ஏர்லைனர் விமானம்தான் நடுவானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட விமானம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கடத்தல்காரர்களிடம் இருந்து எந்தவித கோரிக்கையும் வரவில்லை என்றும் விமானத்தில் உள்ள பயணிகளை மீட்க எகிப்து நாட்டின் அரசு உயரதிகாரிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.