வருமானத்திற்கு அதிகமாக சொத்து: முதலமைச்சரை கைது செய்கிறது அமலாக்கத்துறை
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இமாச்சல பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் முதலமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள அமலாக்கத்துறை அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய அமைச்சராகவும், தற்போது இமாச்சல பிரதேசத்தின் முதலமைச்சராகவும் உள்ள வீரபத்ர சிங் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்துள்ளது. அவர் மீது அவரது மனைவி பிரிதீபா, மீதும் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் வீரபத்ரசிங் மீது அமலாக்க துறையும் சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கிழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.
இந்நிலையில் முதலமைச்சருக்கு சொந்தமான சில சொத்துக்களை முடக்க அமலாக்க துறை நோட்டீஸ் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பாக டெல்லியில் உள்ள வீடு, அவரது பெயரில் உள்ள வைப்பு தொகை, காப்பீடு பத்திரம் ஆகியவை முடக்கப்பட்டதாகவும், மேலும் ரூ.86 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தேவையான ஆதாரங்கள் வலுவாக இருப்பதால் அவரை கைது செய்ய அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எந்த நேரத்திலும் தான் கைது செய்யப்படலாம் என்று சந்தேகம் அடைந்துள்ள வீரபத்ரசிங் காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேற்று சந்தித்து பேசினார். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி தனது அரசை கவிழ்க்க பா.ஜனதா சதி செய்து வருவதாக அவர் புகார் தெரிவித்தார்