பெல்ஜியத்தில் பலியான தமிழக பொறியாளர் உடல் சென்னை வந்தது. அமைச்சர்கள் அஞ்சலி
பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த ராகவேந்திரன் கணேசனின் உடல் நேற்று சென்னை விமானம் மூலம் வந்தது. அவரது உடல் நேற்று சிட்லப்பாக்கம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ராகேவந்திரன் கணேசன் என்ற பொறியாளர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக பெல்ஜியத்தில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்தது. அவரது உடல், ஆம்ஸ்டர்டாம் வழியாக நேற்று மாலை சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து, சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு, கணேசன் உடல் கொண்டு வரப்பட்டது. தமிழக அமைச்சர் வளர்மதி, பாஜக மாநில தலைவர் தமிழிசை, திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் கணேசனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து சிட்லப்பாக்கம் மின்மயானத்தில் ராகவேந்திரன் கணேசனின் உடல் தகனம் செய்யப்பட்டது. பெல்ஜியத்திலிருந்து ராகவேந்திரன் கணேசனின் உடலை கண்டறிந்து, சென்னை கொண்டு இந்திய தூதரக அதிகாரிகள் பெரிதும் உதவியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ராகவேந்திரன் மறைவிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்பட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.