திமிங்கிலம் அழிந்தால் என்னவாகும்?

திமிங்கிலம் அழிந்தால் என்னவாகும்?

dolphin-playingதிமிங்கிலம், யானை போன்ற பெரிய விலங்குகள் முற்றிலுமாக அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது! புவியில் இருக்கும் ஊட்டச்சத்து சுழற்சி எதிர்கொள்ளவிருக்கும் பெரும் பாதிப்பால் விவசாயம் உட்பட பலவற்றுக்கும் ஆபத்து என அபாயச் சங்கு ஊதுகிறார்கள் கிறிஸ்டோஃபர் டவுத்தி (Christopher Doughty), ஜோ ரோமன் (Joe Roman) உள்ளிட்ட ஆய்வாளர்கள்.

யானை போன்ற உருவில் பெரிய விலங்குகள் டன் கணக்கில் உணவை உண்கின்றன. உள்ளே செல்வது வெளியே வந்துதானே ஆக வேண்டும்? இவை மலைபோலச் சாணி இடுகின்றன. திமிங்கிலம், யானை போன்ற விலங்குகள் தின்ற இடத்திலேயே மலம் கழிப்பது இல்லை. அறிவியல்ரீதியாகச் சொல்வதானால், ஊட்டச்சத்து மிகுந்த ஆர்கானிக் -கரிமப் பொருள்களை ஒரு இடத்திலிருந்து வேறு இடத்துக்குக் கடத்தி சுழற்சி செய்ய உதவுகின்றன. உருவில் பெருத்த ராட்சத விலங்குகள் உலக அளவில் ஊட்டச்சத்து சுழற்சிக்கு மிக முக்கியமான அச்சாணியாகத் திகழ்கின்றன.

ஊட்டச்சத்து நிறைந்த கழிவு

நீலத் திமிங்கிலம் நாளொன்றுக்குக் கிட்டத்தட்ட 3,600 கிலோ உணவை உட்கொள்கிறது. பழுப்புத் திமிங்கிலமோ 1,50,000 கிலோ உணவை உட்கொள்கிறது. இதுபோன்ற கடல்வாழ் பெரும் விலங்குகள் உமிழும் மலம் கடலில் வாழும் நுண்ணுயிரிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது. கடலில் திமிங்கிலங்கள் கழிவை வெளியிடும் பகுதிகளில் பைடோபிளங்டன் (phytoplankton) உற்பத்தியைப் பெருக்குகிறது.

பைடோபிளங்டனை உண்டு தான் கடலில் வாழும் ஜூபிளங்டன் (Zooplankton) வாழ்கிறது. சிறிய மீன்களுக்கு ஜூபிளங்டன்தான் உணவு. இந்த மீன்கள் பெரிய மீன்களுக்கு உணவாகின்றன. இப்படியாக கடலில் உணவுச் சங்கிலியில் இறுதிக் கண்ணியாக உள்ள திமிங்கிலம் போன்ற உயிரிகள் உமிழும் கழிவுகள் மறுபடி பைடோபிளங்டன்களுக்கு பாஸ்பரஸ், நைட்ரஜன், இரும்பு முதலிய சத்துகளை தருகின்றன.

நீரிலிருந்து நிலத்துக்கு

கடலில் ஏற்படும் இந்தச் சுழற்சியினால் நிலத்தில் என்ன நடந்துவிடப் போகிறது எனத் தோன்றுகிறதல்லவா! இறால் போன்றவை கடலுக்கும் நன்னீர் பகுதிக்கும் இடையே வலசை செல்பவை. இவை போகும் வழியெல்லாம் கடலில் உள்ள இரும்புச் சத்து, பாஸ்பரஸ், நைட்ரஜன் போன்ற சத்துகள் நிலப் பகுதிக்கும் வந்து சேரும். நன்னீர் நிலைகள் அருகில் உள்ள விலங்குகளின் கழிவு வழியாக இவை நிலத்தை வந்தடைந்து தாவரங்களிலும் சேருகின்றன.

இந்தத் தாவரங்களை உண்ணும் விலங்குகளுக்கும் இந்தச் சத்து சென்றடைகிறது. இவ்வாறு கடல் விலங்குகளிலிருந்து வெளியேறும் ஊட்டச்சத்து நிலத்தின் மூலைமுடுக்கு எல்லாம் சென்றடைகிறது. இறுதியாக, ஆற்று நீர் வழியாக மீண்டும் கடலில் சென்று கலந்து சுழற்சியை நிலைநிறுத்துகின்றன.

மீதமிருக்கும் உயிரிகள்

12,000 ஆண்டுகள் முன்புவரை பூமி பனிப் போர்வையால் மூடப்பட்டிருந்தது. அதன் பின்னரே பனியுகம் முடிந்து பனி இடைக்காலம் (inter glacial) தொடங்கியது. அப்போது தாவரங்களை உண்டு வாழும் சுமார் 50 பெரும் விலங்கினங்கள் பூமியில் சுற்றித் திரிந்தன. அவற்றில் 9 விலங்கினங்கள் மட்டுமே இன்று உள்ளன! சுமார் 900 கிலோ எடை கொண்ட இந்த விலங்குகளில் 16 விலங்குகள் யானை வகை சார்ந்தவை. 7 விலங்குகள் ஒட்டகம், எருமை, நீர்யானை வகையறா. 8 விலங்குகள் தேவாங்கு போன்ற உயிரி.

நிலத்தில் பல உயிரிகள் காணாமல் போனதற்கு மூல காரணம் கடல் வாழ் உயிரினங்களின் அழிவுதான். 1700-களில் கடல்களில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் நீலத் திமிங்கிலங்கள் நீந்திவந்தன. இன்று வெறும் 5,000 முதல் 25,000 வரைதான் உள்ளனவாம்.

திமிங்கில வேட்டை துவங்கிய 1700-களுக்கு முன்பு வரை ஆண்டுதோறும் சுமார் 3 லட்சத்து 40 ஆயிரம் டன் பாஸ்பரஸைக் கடலின் அடியிலிருந்து எடுத்து மேலே கொண்டுவந்து கழிவாகத் திமிங்கிலங்கள் வெளியிட்டன என மதிப்பீடு செய்கின்றனர். இதில் ஐந்தில் ஒரு பகுதி மட்டுமே இன்று சுழற்சியாகிறது.

பறவைகள் மற்றும் மீன்கள் மேலும் கூடுதலாக 1 லட்சத்து 36 ஆயிரம் டன் பாஸ்பரஸைக் கடலிலிருந்து நிலத்துக்கு எடுத்துவந்தன. ஆனால் 300 வருடங்களுக்கு முன்பு இருந்த கடல்-நன்னீர் வலசை செய்யும் உயிரிகளில் இப்போது 5% மட்டுமே எஞ்சியுள்ளன.

மொத்தத்தில் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்துக்கு வந்துகொண்டிருந்த ஊட்டச்சத்தில் வெறும் 5% மட்டுமே இன்று வந்தடைகிறது என்பதை இந்த ஆய்வு கவலையோடு பதிவு செய்திருக்கிறது. இந்தச் சூழலைக் கையாள முதல் கட்டமாகப் பெரிய விலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். திமிங்கிலம், யானை போன்ற பெரிய விலங்குகள் வெறும் காட்சிப் பொருட்கள் அல்ல நமது உயிர் நாடி என்பதை உணர வேண்டும்!

Leave a Reply