‘ஸ்டார் கிரிக்கெட்’ அணிகளின் 8 கேப்டன்கள் யார் யார்?
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புதிய நிர்வாகிகளாக நாசர் தலைமையிலான இளம் நடிகர்கள் பதவியேற்றதில் இருந்து பல்வேறு ஆக்கபூர்வமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அணியின் முக்கிய கொள்கையே நடிகர் சங்கத்திற்கு என சொந்தமாக கட்டிடம் கட்ட வேண்டும் என்பதுதான். இந்த கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்ட ஏப்ரல் 17-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ‘ஸ்டார் கிரிக்கெட்’ போட்டிகள் நடைபெறவுள்ளது. எட்டு அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டிகள் 6 ஓவர்கள் கொண்ட போட்டியாக இருக்கும். இந்த நிலையில் இந்த 8 அணிகளின் பெயர்கள் மற்றும் அதன் கேப்டன்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், ஆர்யா, விஜய்சேதுபதி, ஜீவா ஆகிய எட்டு நடிகர்களின் தலைமையில் 8 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 8 அணிகளுக்கு மதுரை காலோஜ், சென்னை சிங்கம்ஸ், நெல்லை டிராகன்ஸ், தஞ்சை வாரியர்ஸ், திருச்சி டைகர்ஸ், ராம்நாடு ரினோஸ், கோவை கிங்ஸ், சேலம் சேட்டாஸ் என்ற பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு அணியில் விளையாடும் வீரர்கள் மற்றும் பிராண்ட் அம்பாசிடர்கள் ஆகியோர் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது