இளைஞர்களின் தேர்தல் பார்வை மாறுகிறதா?
இருபத்தைந்து, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் என்பது தமிழகத்தில் பெரும் திருவிழா. ‘போடுங்கம்மா ஓட்டு…’ எனச் சிறுவர்கள் தொடங்கி அரசியல் பரப்பரப்புகளை அக்கு வேறு ஆனி வேறாக ஆராயும் பெரியவர்கள் வரை தேர்தலில் ஈடுபாடு கொண்டிருந்தார்கள். இதில், இளைஞர்களின் ஈடுபாடுகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். அபிமான கட்சியின் சின்னங்களைத் தெருக்களில் வரைவது முதல் கொடித் தோரணங்களைக் கட்டுவது வரை உற்சாகம் கரைபுரண்டு ஓடும். இளைஞர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த வேலைகளை செய்த காலம் அது. இப்போதெல்லாம் இதுபோன்ற காட்சிகளைப் பார்ப்பதே அரிது. இளைஞர்களின் தேர்தல் பார்வை வேறு முகமாக மாறிவிட்டது.
இப்போது இருப்பது போல சுவர்களில் சின்னங்கள் வரையவோ அல்லது தோரணங்கள் கட்டவோ அப்போது எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. ஏதாவது ஒரு வண்ணத்தைக் கரைத்து தெரு முழுவதும் சுவர்களில் வரைந்து கட்சிகளுக்கு வாக்குகள் கேட்டு வலம் வருவார்கள் இளைஞர்கள். இளைஞர்கள் ஒவ்வொரு நாளும் கட்சிக் கொடிகளை ஏந்தி வீதிவீதியாக வாக்குக் கேட்டு வந்து போவார்கள். ஒரு தெருவில் ஒரு கட்சியின் கோஷம் கேட்டால், இன்னொரு தெருவில் இன்னொரு கட்சி சார்ந்த கோஷம் கேட்கும். நண்பர்களாக இருக்கும் இளைஞர்கள் வெவ்வேறு கட்சியின் ஆதரவாளர்களாக இருந்தாலும் கருத்து மோதல்களில் மட்டுமே ஈடுபடுவார்கள். மோதலில் எல்லை மீறல் இருக்காது.
ஆனால், இந்தக் காலத்துத் தலைமுறையினருக்கு இதுபோன்ற சந்தர்ப்பங்கள் அமையவில்லை என்றே சொல்லலாம். முன்பு குடும்பத் தலைவர் எந்தக் கட்சியின் ஆதரவாளராக இருக்கிறாரோ, ஒட்டுமொத்தக் குடும்பத்தினரும் அதே கட்சியின் அபிமாணிகளாக இருப்பார்கள். இதில் பேதமே இருக்காது. ஆனால், இப்போது அப்படி இல்லை. தந்தைக்கு ஒரு கட்சியின் மீது ஈர்ப்பு இருக்கும்; தாய் இன்னொரு கட்சியை ஆதரிப்பார்.
ஓட்டுரிமைப் பெற்ற பிள்ளைகள் கட்சி சார்ந்து இல்லாமல் நல்ல வேட்பாளர்களை அடையாளம் காணுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். முன்பு போல கட்சிகளுக்காகக் கொடி பிடிக்கும் அரசியல் இந்தக் காலத்து இளைஞர்களிடம் இல்லை. அரசியல் சார்ந்த விஷயங்களில் குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் பேச்சுகளையும் கேட்டுக்கொள்வதில்லை. சுயமாகவே சிந்தித்து முடிவு எடுக்கிறார்கள்.
முன்பெல்லாம் அரசியல் கட்சித் தலைவர்களின் பேச்சு வடிவைப் பார்க்கவும், செயல்பாடுகளை அறியவும் செய்தித் தாள்கள், வானொலி ஆகியவையே முக்கிய பங்கு வகித்தன. 1990-களின் தொடக்கத்தில்தான் இப்போது இருப்பதுபோல சேனல்கள் வரத் தொடங்கின. இப்போது கட்சியினரின் செயல்பாடுகளை சேனல்கள் மூலம் உடனுக்குடன் அறிந்துக்கொள்ள் முடிகிறது. இதற்கும் அப்பால் சமூக இணையதளங்கள் மூலமாக நொடிக்கு நொடி இளைய சமுதாயம் கட்சிகளின் சமூக, அரசியல் செயல்பாடுகளை அறிந்துகொள்ள முடிகிறது.
போன தலைமுறை இளைஞர்கள்போல இல்லாமல், இந்தத் தலைமுறை இளைஞர்கள் கட்சி அபிமானம் கடந்து கட்சிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கிறார்கள். தலைவர்களின் பேச்சுகளில் உள்ள உண்மைத் தன்மையை ஆராய்கிறார்கள். கட்சிகளின் சந்தர்ப்பவாதங்களை இஷ்டப்படி கலாய்க்கிறார்கள். நிமிடத்துக்கு நிமிடம் இது மாறிவிடுகிறது. இளைஞர்கள் நிறைந்துள்ள கட்சி என்று முன்பு எதையாவது குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியும். இப்போதோ அதுபோன்ற ஒரு நிலை எந்தக் கட்சிக்கும் இருப்பதாக அறிய முடியவில்லை. இளைஞர்கள் எப்படி வாக்களிப்பார்கள், யாருக்கு வாக்களிப்பார்கள், அவர்களை எப்படி வளைப்பது எனத் தெரியாமல் கட்சிகள் திண்டாடிவருகின்றன.
கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக சமூக இணையதளங்கள் மூலமாகத் தன்னைக் கட்டமைத்துக்கொண்டு இளைஞர்களைக் கவர்ந்தார் நரேந்திர மோடி. இப்போது தமிழகத்தில் உள்ள பல தலைவர்களும் மோடியின் உத்தியைப் பின்பற்றி இளைஞர்களைக் கவர முயற்சிக்கிறார்கள். சமூக இணையதளங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள கட்சிகள் போட்டிப்போடுகின்றன. தொண்டரணி, மகளிரணி, விவசாய அணி என இருப்பது போல கட்சிகளில் இன்று தகவல் தொழில்நுட்ப அணியும் (ஐ.டி. அணி) உருவாக்கப்பட்டு வருகின்றது. இளைஞர்கள் தெரிவிக்கும் கருத்துகள், எந்த விஷயங்களை இளைஞர்கள் விவாதிக்கிறார்கள் என்பதையெல்லாம் சமூக இணையதளங்களில் செயல்படும் கட்சியினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
எந்த விஷயத்துக்குச் சமூக இணையதளங்களில் எதிர்ப்பு வருகிறது அல்லது ஆதரவு கிடைக்கிறது என்பதைக் கண்காணித்து அதற்கு ஏற்பக் கருத்து தெரிவிப்பது எனத் தலைவர்களின் போக்கு மாறும் அளவுக்கு இளைஞர்களின் செயல்பாடு இதில் நிறைந்திருக்கிறது என்று சொல்லலாம்.
முன்பெல்லாம் இளைஞர்கள் ஒன்று கூடும்போது தங்களுக்குள் அரசியல் சார்ந்த விஷயங்களை விவாதிக்கவும் செய்வார்கள். பொதுவாகக் கட்சி அபிமானம் அதில் கலந்திருக்கும் என்பதால் ஒரு கட்சியின் செயல்பாட்டுக்கு நியாயம் கற்பிக்கும் வகையிலும் உரையாடல் இருக்கும். இப்போது அந்த நிலை இல்லை என்பதால் அரசியல் சார்ந்த விஷயங்களை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ அல்லது கிண்டல் செய்தோ கருத்து தெரிவிக்க ஒரு களமாக சமூக இணையதளங்கள் உள்ளன. வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு சமூக இணையதளங்கள் மூலம் பிரச்சாரம் செய்யக் கட்சிகள் 200 கோடி ரூபாய் வரை செலவழிக்கும் என்றும் மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது.
சர்க்கரையால் ஈர்க்கப்படும் எறும்பாக, இளைஞர்களை ஈர்க்கும் இந்த சமூக வலைத்தளங்கள் அரசியல் ரீதியாக எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. கூகுள், ஃபேஸ் புக், ட்விட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஸ்கைப், யூடியூப் என சமூக இணையதளங்கள் மூலம் கொள்கைகளையும் கருத்துகளையும் இளைய சமூகத்திடம் புகுத்த சமூக ஊடகங்களே சிறந்த வழி என கட்சிகள் நினைப்பதிலிருந்து இதன் தாக்கத்தை அறிந்துகொள்ளலாம்.
மாதா, பிதா, கூகுள், கடவுள் என்பதே இளைஞர்கள் மத்தியில் இந்த நவீன யுகத்தில் விளைந்துள்ளது மாற்றம். இந்த மாற்றத்தில் இளைஞர்களின் அரசியல் பார்வையும் மாறியிருக்கிறது என்பதே நிதர்சனம்.
தேர்தல் மீம்ஸ் படிப்பது பிடிக்கும்
இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த தேர்தல் ஈடுபாடு குறித்து கோவையைச் சேர்ந்த டி.வி.பாபுவிடம் கேட்டோம். “தேர்தல் சமயத்தில் அதுபற்றி நண்பர்களுடன் அடிக்கடி விவாதிப்போம். யார் ஆட்சிக்கு வருவார், யார் தோற்பார் என்பதையெல்லாம் மணிக்கணக்கில் பேசுவோம். எங்கள் வீட்டுச் சுவரில் அடுப்புக் கரியால் எனது அபிமான கட்சியின் சின்னத்தை வரைந்து வாக்குக் கேட்டதும் உண்டு.
எங்க வீட்டில் எல்லோருமே பிடித்த கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவோம். தேர்தல் நாளன்று தெரிந்தவர்களிடம் ஓட்டுப் போட்டாச்சா என்று கேட்டப்படி நண்பர்களுடன் சேர்ந்து வீதிகளைச் சுற்றி வருவோம். இப்போது இருப்பதுபோல் தேர்தல் முடிவு காலையிலேயே முன்பு தெரியாது. மாலையில்தான் முதல் சுற்று முடிவே தெரிய வரும். வாக்கு எண்ணிக்கை இடத்துக்குச் சென்று கும்பலோடு கும்பலாக நண்பர்களுடன் நின்றதெல்லாம் மலரும் நினைவுகளாக மனதில் நிழலாடுகின்றன” என்றார் பாபு.
இந்தக் காலத் தேர்தல் ஈடுபாடு குறித்து திருச்சியைச் சேர்ந்த தினேஷ் கூறுகையில், “இரண்டாவது முறையாக ஓட்டு போட ஆர்வமாக இருக்கிறேன். ஓட்டுப் போடுவதோடு ஜனநாயகக் கடமை முடிந்தது. சமூக இணையதளங்களில் கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து வரும் மீம்ஸ்களைப் படிப்பது மிகவும் பிடிக்கும். அதுபற்றி கருத்து தெரிவிக்கவும் செய்வேன். ஆனால், தனிப்பட்ட முறையில் எந்தக் கட்சி மீதும் ஈடுபாடு இல்லை. எந்தக் கட்சிக்கும் ஓட்டுப் போடச் சொல்லி வீட்டில் வற்புறுத்தமாட்டார்கள். அப்படியே சொன்னாலும் அதை நான் கேட்கமாட்டேன் என்று வீட்டில் எல்லோருக்கும் தெரியும். தேர்தலில் நான் ஓட்டுப் போட்ட கட்சி வெற்றி பெற்றாலும், தோற்றாலும் அதைப்பற்றி மகிழ்ச்சியோ அல்லது கவலையோபட மாட்டேன்” என்றார் தினேஷ்.