திமுகதான் பேரம் பேசியதாம். தேமுதிகவுக்கு பேரம் என்றால் என்னவென்றே தெரியாதாம்?
தங்கள் கூட்டணிக்கு வந்தால் கோடிக்கணக்கில் பணம் தருவதாகவும், அதிகளவில் தொகுதி தருவதாகவும் திமுக மட்டுமே தேமுதிகவிடம் பேரம் பேசியதாகவும், தேமுதிக எந்தவித பேரத்திலும் ஈடுபடவில்லை என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தமிழில் ஒரு பழமொழி உண்டு. ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்று. அதுபோலத்தான் விஜயகாந்தை காப்பாற்றுவதாக நினைத்து கொண்டு அவர் மீது பழியை சுமத்தி வருகிறார்.
பேரம் என்றால் ஒருவர் அதிகமாக கேட்பது, மற்றொருவர் அதை குறைத்து கேட்பது. இதற்கு பெயர்தான் பேரம். ஒருவர் மட்டுமே பேசினால் அதற்கு பெயர் பேரம் இல்லை. தேமுதிகவிடம் திமுக பேரம் பேசியது என்றால் அந்த பேரம் படியவில்லை என்றுதான் அர்த்தமே ஒழிய, ஒருதரப்பு மட்டுமே பேசியது என்பது பொருள் அல்ல.
உண்மை இவ்வாறிருக்க திமுக மட்டுமே பணம் கொடுக்க முன்வந்ததாகவும், அதை வேண்டாம் என மறுத்துவிட்டு விஜயகாந்த் வந்துவிட்டதாகவும் வைகோ கூறியதை சமூக வலைத்தளங்களில் மக்கள் எள்ளி நகையாடுகின்றனர். ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் செலவு செய்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு அரசியல்வாதி பேரமே பேசவில்லை என்று கூறுவதை எல்.கே.ஜி குழந்தை கூட நம்பாது என்று டுவிட்டரில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.