குமரன் குன்றம் படி பூஜை!
அம்பிகை வழிபாட்டில் தனிச் சிறப்பு கொண்டது, சுவாஸினி பூஜை. எங்கெல்லாம் பெண்கள் போற்றி வணங்கப்படுகிறார்களோ, அங்கெல்லாம் அம்பிகையின் பூரண அருள் நிறைந்திருக்கும் என்கின்றன ஞான நூல்கள். இந்தப் பேருண்மையை உணர்ந்தே சென்னை – அம்பத்தூர், ஸ்ரீஸ்வபாவானந்த குரு மண்டலி சார்பில், நான்கு வருடங்களுக்கு ஒருமுறை அம்பிகை வழிபாட்டை மிகச் சிரத்தையுடன் முன்னெடுத்து செய்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த வருடம் சென்னை, அம்பத்தூர், ராம்நகர், நிர்மல் தெருவில் உள்ள ஸ்ரீமஹாலக்ஷ்மி கல்யாண மண்டபத்தில், வரும் ஏப்ரல் மாதம் 12, 13, 14, 15 ஆகிய நான்கு நாட்கள், வசந்த நவராத்திரி மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.
ஏப்ரல் 12-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று, காலை 7 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் வசந்த நவராத்திரி வைபவம் துவங்கவுள்ளது. அன்றைய தினம் 300 சுமங்கலிகள் கலந்துகொள்ள சுவாஸினி பூஜை நடைபெறவுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் அதாவது 13, 14 மற்றும் 15-ம் தேதிகளில் முறையே 300, 100, 300 எனும் எண்ணிக்கையில் சுமங்கலிகள் பங்கேற்கும் சுவாஸினி பூஜை நடைபெறும். மொத்தம் 1000 பெண்களை அம்பிகையாக பாவித்து, சுவாஸினி பூஜை, கன்யா பூஜை, வடுக பூஜை ஆகிய வைபவங்கள் நடைபெற உள்ளன. ஆன்மிக அன்பர்கள் இந்த வைபவத்தைத் தரிசித்து அம்பிகையின் அருள் பெறலாம்.
குமரன் குன்றம் படி பூஜை!
சென்னை, குரோம்பேட்டைக்கு அருகில் உள்ளது குமரன் குன்றம். முருகப்பெருமான் ஸ்வாமிநாத ஸ்வாமியாக அருள்பாலிக்கும் இந்தத் தலத்தை நடு சுவாமிமலை எனச் சிறப்பிப்பார்கள். சிறு குன்றின் அடிவாரத்தில் கணபதி பெருமான், இடைப் பகுதியில் சிவனாரின் ஆலயம் அமைந்திருக்க, உச்சியில் முருகப்பெருமான் கோயில் கொண்டிருக்கிறார்.
தமிழ் வருடப்பிறப்பை ஒட்டி இந்தக் கோயிலில் நிகழும் படி பூஜை வெகு பிரசித்தம். இந்த வருடமும், வரும் ஏப்ரல் – 14 அன்று, புதிய தமிழ்ப் புத்தாண்டு அனைவருக்கும் நலமும் வளமும் தர வேண்டும் என்ற பிரார்த்தனையுடன், 38-வது வருட படித் திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது.
காலை 5:30 மணிக்கு குஹ சுப்ரபாதத்துடன் படித் திருவிழா தொடங்குகிறது. சென்னை ஓம்ஸ்ரீ முருகாஸ்ரமம் ஸ்ரீசங்கராநந்த சுவாமிகள், விநாயகர் சந்நிதியில் இருந்து படித் திருவிழாவைத் தொடங்கிவைக்கிறார். ஒவ்வொரு படியாக அருணகிரிநாதரின் தித்திக்கும் திருப்புகழைப் பாடியபடி படிபூஜை நடைபெறும். தொடர்ந்து அருணகிரிநாதர் அரங்கில் இன்னிசை நிகழ்ச்சியும், கந்தர் அநுபூதி மற்றும் ஸ்ரீமெய்கண்ட வேலாயுத சதகம் ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழாவும் நடைபெற இருக்கிறது. விழாவில் அன்பர்கள் கலந்துகொண்டு அழகன் முருகனின் அருள் பெறலாம்.
ஐயனார் கோயில் கும்பாபிஷேகம்!
கும்பகோணம் அருகில் உள்ளது 79. மாத்தூர் கிராமம். இங்கு அமைந்திருக்கும் ஸ்ரீபூரண ஸ்ரீபுஷ்கலா சமேத ஸ்ரீஹரிஹரபுத்ர வீரசேன ஐயனார் திருக்கோயில் மிகப் பழைமையானது. கிராம மக்களால் ‘கிராம ரக்ஷகர்’ என்று போற்றி வணங்கப் பெறும் ஸ்ரீஹரிஹர புத்ர வீரசேன ஐயனாரின் திருக்கோயில் புதுப்பிக்கப்பட்டு, ஏப்ரல் 11-ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள், அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற இருக்கிறது. அன்பர்கள் கலந்துகொண்டு ஐயனாரின் அருள் பெறலாம்.