ஐ.பி.எல் போட்டிக்கு 65 லிட்டர் தண்ணீரா? எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக

ஐ.பி.எல் போட்டிக்கு 65 லிட்டர் தண்ணீரா? எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக

IPL-Theatresஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட் திருவிழா போல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டிகள் வரும் 8ஆம் தேதி முதல் தொடக்கவிழாவுடன் ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டியை மும்பை உள்பட மகாராஷ்டிராவின் எந்த ஒரு மைதானத்திலும் நடத்த பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஐ.பி.எல் போட்டியின் ஒவ்வொரு மைதானத்தையும் தயார் செய்ய 65 லிட்டர் முதல் 70 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படும் என்றும் மாநிலத்தில் பொதுமக்கள் தண்ணீருக்காக கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் ஐ.பி.எல் போட்டிக்காக இவ்வளவு தண்ணீரை வீணாக்க அனுமதிக்க முடியாது என்றும் மகாராஷ்டிரா மாநில பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஷஷாங்க் மனோகருக்கு மகாராஷ்டிரா மாநில பா.ஜனதா தலைவர் விவேகானந்தா குப்தா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில், “மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள மராத்வாடா மற்றும் விதர்பா பிராந்தியங்களில் கடந்த இரண்டாண்டு ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால் கடுமையான வறட்சி நிலவி வருவதை நீங்கள் அறிவீர்கள். இதனால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து 90 லட்சம் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மாநிலத்தின் மும்பை, புனே, நாக்பூர் நகரங்களில் நடத்தப்படவுள்ள ஐ.பி.எல். போட்டிகளுக்காக ஒவ்வொரு முறையும் மைதானத்தை செப்பனிட்டு, செம்மைப்படுத்த சுமார் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படும்.வாரத்தில் மூன்றுமுறை இதைப்போல் செம்மைப்படுத்த சுமார் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.

இவ்வகையில், 19 போட்டிகளுக்காகவும் மைதானங்களை தயார்படுத்த சுமார் 70 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். ஒட்டுமொத்த மாநிலமும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 70 லட்சம் லிட்டர் தண்ணீரை வீணடித்து இங்கு ஐ.பி.எல். போட்டிகளை நடத்துவது அறிவார்ந்த செயலாக அமையாது.

நமக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு நீங்கள் கருணைகாட்ட வேண்டிய இந்த தருணத்தில், ஐ.பி.எல். போட்டிகளை மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நடத்தும் முடிவை கைவிட்டு, வேறொரு இடத்தில் நடத்த ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

தொடக்கவிழா மற்றும் இறுதிப்போட்டி உள்பட பல முக்கிய போட்டிகள் மும்பையில் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் திடீரென இந்த போட்டிக்கு மகாராஷ்டிரா பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply