இன்கம் ஃபண்டுகள் யாருக்கு ஏற்றது?
இன்கம் ஃபண்டுகளில் திரட்டப்படும் பணம், நிரந்தர வருமானம் தரக்கூடிய பாண்டுகள், கடன் பத்திரங்கள், மணி மார்க்கெட் முதலீடுகளான டெபாசிட் சர்ட்டிஃபிகேட்டுகள் போன்றவைகளில் முதலீடு செய்யப்படும். ஈக்விட்டி முதலீட்டு சாதனங்களில் அறவே இருக்காது.
நம்மில் பலரும் இது போன்ற இன்கம் ஃபண்டுகளில் ரிஸ்கே இல்லை என்று நினைக்கிறோம். ஆனால், இந்த வகையான ஃபண்டு களில் மூன்று வகையான ரிஸ்க்குகள் இருக்கின்றன. கிரெடிட் ரிஸ்க், இன்ட்ரெஸ்ட் ரேட் ரிஸ்க், ரீஇன்வெஸ்ட்மென்ட் ரிஸ்க்.
கிரெடிட் ரிஸ்க்!
பாண்ட் / கடன் பத்திரங்கள் வெளியிட்ட நிறுவனம் சரியான நேரத்தில் முதலீட்டாளர்களுக்கு வட்டியையும் அசலையும் திருப்பிச் செலுத்தவில்லை எனில் அதனால் வரும் ரிஸ்க் தான் கிரெடிட் ரிஸ்க்.
இன்ட்ரெஸ்ட் ரேட் ரிஸ்க் !
வட்டி விகித மாற்றத்தால் பாண்டு மதிப்பில் ஏற்படும் மாற்றத்தைதான் இன்ட்ரெஸ்ட் ரேட் ரிஸ்க் என்று சொல்கிறோம். இந்த இன்ட்ரெஸ்ட் ரேட் ரிஸ்க் என்பது நாம் எத்தனை வருடங்கள் முதலீடு செய்கிறோம் என்பதைப் பொறுத்து இருக்கிறது. கடன் பத்திரங்களில் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்தால் வட்டிவிகித ஏற்ற இறக்கத்தால், அதன் மதிப்பு அதிக மாறுதல்களுக்கு உட்படும். குறைந்த வருடங்கள் முதலீடு செய்தால், மதிப்பு குறைந்த அளவிலான மாறுதல்களுக்கு உட்படும்.
ரீ-இன்வெஸ்ட்மென்ட் ரிஸ்க்!
மறுமுதலீடு செய்வதில் உள்ள ரிஸ்க். இந்த வகையான பிரச்னை தொடர்ந்து வட்டி குறைந்து கொண்டுவரும் காலங்களில் அதிகமாக பார்க்க முடியும். உதாரணமாக, ஒரு பாண்டில் 5 ஆண்டுகளுக்குமுன் முதலீடு செய்யப்பட்டபோது 10% வட்டி கிடைக்கிறது. அதே பாண்டில் தற்போது முதலீடு செய்யப் போனால், வெறும் 8.5% வட்டி தான் கிடைக்கிறது. இப்படி தொடக்கத்தில் செய்த முதலீட்டின் மூலம் கிடைத்த பணத்தில் மீண்டும் அதே முதலீட்டில் வருமானம் குறை வாக கிடைக்கிறது என்பதால் அந்த முதலீட்டு சாதனத்திலேயே முதலீடு செய்ய முடியாமல் போகிறது அல்லவா, அது தான் ரீ- இன்வெஸ்ட்மென்ட் ரிஸ்க்.
இவற்றைப் படித்தவுடன் கடன் ஃபண்டுகளில்கூட ரிஸ்க்கு இருக்கிறதா என்றுஆச்சரியம் எழுகிறதா..?
சரி, கடன் ஃபண்டுகளில் பல்வேறு வகையான ஃபண்டுகள் இருந்தாலும், இப்போது ஷார்ட் டேர்ம் மற்றும் லாங் டேர்ம் ஃபண்டுகளை மட்டும் பார்ப்போம். இந்த இரண்டு வகையான ஃபண்டுகளுக்குமான நோக்கங்களும், முதலீட்டாளர் எடுக்கும் ரிஸ்குக்கு கிடைக்கும் வருமானமும் மாறுபடும்.
கடன் ஷார்ட் டேர்ம் ஃபண்டுகள்!
சுமார் இரண்டு வருடங்களுக்குள் செய்யும் முதலீடுகளுக்கு, குறைந்தபட்ச நிலையான வருமானம் கிடைக்க வேண்டும் என்பவர்கள் இந்த ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இந்த ஃபண்டுகளின் போர்ட் ஃபோலியோவில் இடம் பெற்றிருக்கும் பாண்டுகளின் முதிர்வுக் காலம் 2 – 2.5 ஆண்டு களாக இருக்கும். அதேநேரத்தில், வட்டி விகிதத்தில் மாறுதல் நடந்தாலும், ஃபண்டு மூலம் கிடைக்கும் வருமானத்தில் பெரிய அளவில் மாறுதல் இல்லாமல் இருக்கும்.
கடன் லாங் டேர்ம் ஃபண்டுகள்!
ஷார்ட் டேர்ம் ஃபண்டில் முதலீடு செய்யும் முதலீட்டாளர் களைவிட சற்று கூடுதல் ரிஸ்க் எடுத்து நீண்ட காலத்துக்கு முதலீடு செய்யும் முதலீட்டாளர் கள் லாங் டேர்ம் ஃபண்டில் முதலீடு செய்யலாம். இந்த ஃபண்டுகளின் போர்ட்ஃபோலி யோவில் இடம் பெற்றிருக்கும் பாண்டுகளின் முதிர்வுக் காலம் 7 – 9 ஆண்டுகளாக இருக்கும். அதற்குத்தகுந்த மாதிரியான நீண்ட கால பாண்டு, டெபாசிட் மற்றும் கடன் பத்திரங்களில் தான் லாங் டேர்ம் ஃபண்டு களுக்கான போர்ட்ஃபோலியோ இருக்கும்.
லாங் டேர்ம் ஃபண்டுகளை பொறுத்தவரை, சரியான காலகட்டத்தில் முதலீடு செய்து, சரியான நேரத்தில் விற்று வெளியேற வேண்டும். குறிப்பாக, இந்த ஃபண்டுகளில் வட்டி விகிதம் குறையும்போது முதலீடு செய்வது நல்லது.
ஈக்விட்டி ஃபண்டுகளைப் போல இல்லாமல், கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள் நிலையான வருமானத்தை எதிர்பார்க்கிறார்கள். அப்படி யானால், வங்கி எஃப்.டி.களுக்கு மாற்றாக இந்த கடன் ஃபண்டுகள் இருக்குமா என்றால் இருக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது.
ஏனெனில், ஓப்பன் எண்டட் கடன் ஃபண்டு களில் பணவரத்து எப்போது அதிகரிக்கும், எப்போது குறையும் என்று கணிக்க முடியாது. இந்த மாதிரியான தருணங்களில் வட்டிவிகித மாறுதல்கள் அறிவிக்கப்பட்டு, திடீரென பணவரத்து அதிகரித் தால், முதலீட்டாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நிகர வருமானம் சற்று குறையும்.
கடன் ஃபண்டுகளின் யூனிட்களை 3 ஆண்டு களுக்கு மேல் வைத்திருந்தால், நீண்ட கால மூலதன ஆதாய வரிக்கு உட்படும். இதனால் கடன் ஃபண்டுகள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 20% நீண்ட கால மூலதன ஆதாய வரியாக செலுத்த வேண்டி இருக்கும். இது அதிக வருமான பிரிவினருக்கு லாபகரமாக அமையும்.
கடன் ஃபண்டுகளில் ஓரளவுக்கு நிலையான வருமானம் வேண்டும் எனில், நிலையான முதிர்வுத் திட்டங்களில் முதலீடு செய்து கொள்ளலாம். இந்த வகையான திட்டங்கள் குளோஸ் எண்டட் ஃபண்டுகள் என்பதால், என்.எஃப்.ஓ வரும்போதே சரியாக யோசித்து, ஃபண்டை கையாளும் நிறுவனம் குறிப்பிட்டுள்ள காலம் வரை நம் பணத்தை அப்படியே முதலீடு செய்துவிட வேண்டி இருக்கும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஃபண்ட் நிறுவனம் முதிர்வுக் காலத்துக்குமுன் நாம் முதலீடு செய்த பணத்தை திரும்ப கொடுக்காது. அத்துடன் ஓபன் எண்டட் ஃபண்டுகளைப் போல, புதிய பண வரத்துகள் வராததால், வட்டி விகித மாறுதல் பிரச்னைகளை எளிமையாக கையாண்டு, முதலீட்டாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நிகர வருமானமும் அதிகரிக்கும்.
தொகுப்பு: மு.சா.கெளதமன்.
டிஸ்க்ளெய்மர் : மேற்கூறிய கருத்துக்கள் எல்லாம் கட்டுரை ஆசிரியரின் சொந்தக் கருத்துக்களே. இவைகளை ஒரு முதலீட்டு ஆலோசனைகளாக எடுத்துக்கொள்ள வேண்டாம். முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன் நிதி ஆலோசகரை கலந்தாலோசித்து முடிவு செய்யவும். கட்டுரை ஆசிரியர் எந்த ஒரு முதலீட்டு நஷ்டத்திற்கும் பொறுப்பாகமாட்டார்.