கிராமப்புற மாணவர்களின் நலனை கருதி எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் கிடையாது.

கிராமப்புற மாணவர்களின் நலனை கருதி எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் கிடையாது.

 medicalஇந்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் என்றும் பிரிண்ட் வடிவிலான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட மாட்டாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதே முறை எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கும் ஏற்படுமா? என்று மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் இதுகுறித்து கருத்து கூறியுள்ள தமிழக சுகாதாரத்துறை எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை கொண்டுவரப் படாது என்று தெரிவித்துள்ளது. இதனால் கிராமப்புற மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை கொண்டுவரப்படாது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையால் நிறைய பிரச்சினைகளும், குளறுபடிகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. நகர்ப்புறங்களில் வசிக்கும் மாணவர்கள் எளிதாக ஆன்லைனில் விண்ணப்பித்து விடுவார்கள். கிராமப் புறங்களில் வசிக்கும் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பது சிரமம். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை கொண்டு வந்தால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால்தான் மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை கொண்டுவரவில்லை” என்று கூறினார்.

ஆனால் அதே நேரத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இவை தவிர விவசாயம், தோட்டக்கலை, வனவியல் படிப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை ஏற்கனவே அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தகக்து.

Leave a Reply