ஆசிரியர் பணிக்கு திரும்புகிறார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
இந்தியாவின் சிறந்த பொருளாதார மேதைகளில் ஒருவராக இருந்த மன்மோகன் சிங் கடந்த 2004 முதல் 2014 வரை பாரத பிரதமராக பதவியில் இருந்தார். இந்நிலையில் தற்போது அவர் ஆசிரியர் பணிக்கு திரும்ப உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஐ.நா. சபைப் பணி, ரிசர்வ் வங்கி ஆளுநர், இந்திய நிதியமைச்சர் போன்ற பதவிகளில் இருந்தபோது பெரும் மதிப்புக்குரியவராக மன்மோகன் சிங் இருந்தார். ஆனால் பிரதமர் ஆன பின்னர் சோனியா காந்தியால் ஆட்டுவித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டார். அதுமட்டுமின்றி ஒருசில ஊழல் பட்டியலிலும் அவருடைய பெயர் இருந்தது. இதனால் மனவேதனைக்கு உள்ளான மன்மோகன்சிங் தற்போது ஆசிரியர் பணியாற்றுவதன் மூலம் மன நிம்மதியை பெறலாம் என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக் கழகத்துக்கு செல்லும் மன்மோகன் சிங், மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார். பின்னர் டெல்லியில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்துவார் என்று பல்கலை துணைவேந்தர் அருண் குமார் குரோவர் தெரிவித்துள்ளார்.