முரசு சின்னத்தை கைப்பற்ற சந்திரகுமார் அதிரடி நடவடிக்கை. அதிர்ச்சியில் விஜயகாந்த்
திமுகவுடன் கூட்டணி இல்லை தனித்து தேர்தலில் நிற்கப்போகிறேன் என்று விஜயகாந்த் எப்போது அறிவித்தாரோ அப்போதே அவருக்கு ஏழரை ஆரம்பமாகிவிட்டது. தனித்து போட்டி என்றவுடன் ஏற்கனவே சீட் கேட்டு பணம் கட்டியவர்கள் தங்கள் பணத்தை திருப்பி கேட்க தொடங்கியதால் வேறு வழியின்று மக்கள் நலக்கூட்டணியுடன் இணைவதாக விஜயகாந்த் அறிவித்தார்.
தனித்து போட்டியிடுவதற்கும், மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றும் இதனால் கட்சித்தலைவரின் முடிவுக்கு தங்கள் தரப்பில் இருந்து அதிருப்தி தெரிவிப்பதாகவும் விஜயகாந்தின் வலதுகரமாக செயல்பட்ட வி.பி.சந்திரகுமார் ஆரம்பித்து வைக்க தற்போது அதிருப்தியாளர்கள் கூட்டத்தின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.
இந்நிலையில், வரும் 10ம் தேதி தேமுதிக கட்சியின் செயற்குழு மற்றும் உயர்மட்டக்குழு கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் விஜயகாந்த் அறிவித்தார்.
ஆனால் அதே நாளில் அதாவது, ஏப்ரல் 10ம் தேதி சென்னை தியாகராயர்நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிருப்தியாளர்கள் கூட்டத்துக்கு சந்திரகுமார் ஏற்பாடு செய்துள்ளார். “கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் இசைந்த கருத்துள்ளவர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சந்திரகுமார் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், கட்சியின் சின்னத்தை கைப்பற்றும் முயற்சியிலும் அவர் ஈடுபட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் விஜயகாந்த் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.