இரண்டு கட்சிகளை துண்டு துண்டாக உடைத்த மக்கள் நலக்கூட்டணி
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக தங்கள் கூட்டணிதான் என்று மக்கள் நலக்கூட்டணியினர் கூறிவருகின்றனர். தங்கள் கூட்டணிக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகுவதால் தங்கள் கூட்டணியை உடைக்க திமுக, அதிமுக முயற்சி செய்வதாக கூறும் மக்கள் நலக்கூட்டணியால் இரண்டு கட்சிகள் உடைந்துள்ளது.
மக்கள் நலக்கூட்டணியுடன் சேர்ந்ததால் அதிருப்தி அடைந்த தேமுதிகவின் முன்னணி தலைவர் சந்திரகுமார், மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இவருடைய புதிய கட்சிக்கு கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட தேமுதிக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆதரவு கொடுத்துள்ளனர்.
அதேபோன்று மக்கள் நலக்கூட்டணியில் இணைந்த தமாக தலைவர் வாசனுக்கும் அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜி.கே.வாசன் தன்னிச்சையாக தொண்டர்களின் விருப்பத்துக்கு மாறாக மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்துள்ளதாக பீட்டர் அல்போன்ஸ் உள்பட பல தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் தமாகவின் பல தலைவர்கள் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகவும், சோனியா காந்தியிடம் அப்பாயின்மெண்ட் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மக்கள் நலக்கூட்டணியில் இணைந்த இரண்டு கட்சிகளும் இரண்டாக உடைந்துள்ளதால் இந்த கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.