சுற்றுலா கிளப்களின் பகீர் மோசடிகள்…! – இது கார்பரேட் சதுரங்கவேட்டை
நம்மில் பலருக்கும் இது போன்ற ஒரு போன் நிச்சயம் வந்திருக்கும். எதிர் லைனில் இருக்கும் பெண், ”மொத்தமாக 3 லட்ச ரூபாயை எங்க ரிசார்ட்ல கட்டிடுங்க. அடுத்த 25 வருஷத்துக்கு நீங்க எப்போ வேணுமின்னாலும் எந்த வாடகையும் இல்லாம உங்க குடும்பத்தோட எங்க ரிசார்ட்ல வந்து தங்கலாம். தமிழ்நாடு முழுக்க 15 இடங்கள்ல எங்களுக்கு ரிச்சார்ட் இருக்கு” என்று ஆசைவார்த்தை காட்டுவார்கள்.
அட, நல்ல திட்டமா இருக்கே என்று காதுகொடுத்து கேட்க ஆரம்பித்தோம் என்றால், 3 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாயை உங்களிடம் வசூல் செய்யாமல் விடமாட்டார்கள். அதன் பிறகு அவர்கள் சொன்னபடி நடப்பார்களா என்பது கடவுளுக்கும், அவர்களுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்கும். இந்த திட்டத்திற்கு பெயர்தான் டைம்ஷேர்.
இதை முதலீடு என்றுதான் அழைக்கிறார்கள். நீங்கள் இன்வெஸ்ட் பண்ணுவது ஒரு சுற்றுலா தளத்தின் ஹோட்டல் அறையில்! அந்த ஹோட்டல் அறை வருடத்தில் குறிப்பிட்ட நாட்களில் உங்களுக்கு தங்குவதற்காக ஒதுக்கித்தரப்படும். அந்த நாட்களில் அங்கே இலவசமாக தங்கிக்கொள்ளலாம். இந்த அறைகள் அந்த நிறுவனத்திற்கு எங்கெல்லாம் கிளை உள்ளதோ அங்கெல்லாம் உங்களுக்ககு கிடைக்கும். இதன்மூலம் கட்டுகிற காசுகேற்ப உலகம் முழுக்கவோ அல்லது இந்தியா முழுக்கவோ எங்குவேண்டுமானாலும் வருடத்திற்கு ஒரு முறை குடும்பத்துடன் ஜாலி டூர் அடிக்கலாம்.
ஒரு நல்ல நாளில் இன்ப சுற்றுலா போகலாம் என்று வீட்டிலிருப்பவர்களை தயார் செய்துவிட்டு, தொடர்புடைய்ய கம்பெனிக்கு போனை போடுவோம். அவர்களிடமிருந்து வருகிற முதல் பதில் நீங்கள் கேட்கும் நாளில் அறை காலி இல்லை என்பதுதான். அப்படியே ஒதுக்கி கொடுத்தாலும், தங்கி இருக்கும் காலத்தில் பல புதுப் புது கட்டணங்களை வசூலித்து உங்கள் பர்ஸை காலி செய்துவிடுவார்கள், மனக் கவலையையும் கூட்டிவிடுவார்கள்.
இந்தத் திட்டத்தில் லட்சக்கணக்கில் பணம் கட்டி சேர்ந்து தங்கும் இடத்தை பெறுவதை விட, தனியே செலவு செய்து வந்தால் கூட குறைவாகத்தான் செலவாகும் என்கிற எண்ணம் உங்களுக்கு புரிய ஆரம்பிக்கும். ஆனால், ஏற்கனவே உங்க பாக்கெட்டிலிருந்து பல லட்சம் போயிருக்கும்! வீட்டிலும் இப்படிப்பட்ட ஒரு இடத்தில் காசைக்கொட்டி கரியாக்கியதற்காக உதையும் கிடைக்கும்.
புதுப்புது ஏமாளிகள் கிடைத்து வருவதால் இதுபோன்ற சுற்றுலா கிளப் நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் தங்கும் அறை மட்டும்தான் இலவசம் என்பது யாருக்குமே தெரியாது. உள்ளே நுழைந்துவிட்டால் பராமரிப்புக் கட்டணம், தண்ணீர், மின்சார செலவு என ஏகப்பட்ட பணத்தை வசூலிப்பதாக அண்மைக் காலத்தில் அதிக புகார்கள் வந்துக் குவியத்தொடங்கியிருக்கின்றன. நுகர்வோர் நீதிமன்றங்களில் கணிசமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்தத் திட்டத்தில் நடக்கும் குளறுபடிகள் பற்றியும் சிக்கல்கள் குறித்தும் செக்யூரிட்டீஸ் அண்ட் டைம்ஷேர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் வி.நாகப்பனிடம் பேசினோம்.
”பணவீக்கத்தைத் தாண்டி, அதன் பாதிப்பு இல்லாமல், இப்போதைய கட்டணத்திலேயே எதிர்காலத்தில் விடுமுறையை ‘ஹாயா’க அனுபவிக்கலாம் எனச் சொல்லி ஆரம்ப காலங்களில் விற்கப்பட்டதுதான் ‘டைம் ஷேர்’ விடுமுறைகள். முதலில் நாம் கட்டும் முழுத் தொகையை இரு பகுதியாகப் பிரித்து, அதன் ஒரு பகுதி டைம் ஷேரின் விலையாகவும், மறுபகுதி அவ்வப்போது அதைப் பராமரிக்கவும் எனச் சொல்லித்தான் விற்கப்பட்டது.
கடந்த 1980-களின் கடைசி துவங்கி முதல் பத்துப் பதினைந்து ஆண்டுகள் முன்புவரை சொன்னபடி நடந்து கொண்டனர். ஆனால், அதன் பின்னர், முதலில் கட்டிய தொகை போக ஆண்டுப் பராமரிப்புத் தொகை எனத் தனியாக வசூலிக்கத் துவங்கினர். அப்போது ஆரம்பித்ததுதான் வில்லங்கம். இதுபோக, நாம் பயன்படுத்தும்போதெல்லாம், பயன்பாட்டுக் கட்டணம் என வேறு கூடுதலாக வசூலிக்க ஆரம்பித்தனர்.
உறவினர்களுக்கு நம் விடுமுறையைப் பரிசாக கொடுக்கலாம் என்று ஆரம்பத்தில் சொன்னவர்கள், பின்னர் அதற்கும் தனியாகக் கட்டணம் வசூலிக்கத் துவங்கினர். முதலில், டைம் ஷேரின் முழு உரிமத்தையும் விலைக்கு விற்றவர்கள், பின்னர் 99 ஆண்டுகால லீஸ் என மாற்றி, அதன் பின்னர் 33 ஆண்டுகளாகக் குறைத்து இப்போது வெறும் 25 ஆண்டுகளில் வந்து நிற்கிறது இந்த ஒப்பந்தம். இவையெல்லாம் பத்தாது என, நாம் கேட்கும் காலங்களில் பெரும்பாலும் அறைகள் கொடுப்பதில்லை. அறை காலி இல்லை எனச் சொல்லி நம் விடுமுறையை அடுத்தவருக்கு விற்றுக் காசாக்குவதாகவும் குற்றச்சாட்டு எழத் துவங்கியது.
மேலும், சுமார் 15-க்கும் மேற்பட்ட இடங்களைப் பேம்லெட்டில் போட்டுக் காண்பிப்பார்கள். பின்னர் விசாரித்தால் அந்த இடங்களில் இவர்களுக்கு ஒரு ரூம்கூட இருக்காது. கேட்டால் அவையெல்லாம், எங்களுக்குச் சொந்தமானவை அல்ல. ஒப்பந்த அடிப்படையில் வைத்திருந்தோம். இப்போது ஒப்பந்தம் முடிந்துவிட்டதால் அந்த இடத்தில் எங்களுக்கு கிளை இல்லை எனக் கூலாகச் சொல்வார்கள்.
விடுமுறைக்கு அருகாமை நாட்களில் கேட்டால், அவைலபிள் இல்லை என்பதும், பல நாட்களுக்கு முன்னர் கேட்டால் ரொம்ப முன்னாலேயே கேட்கிறீர்கள் என மறுப்பதும் நடந்தது. சுமார் மூன்று லட்சம் ரூபாயை முன்கூட்டியே கட்டிவிடும்பட்சத்தில் ஒவ்வொரு வருடமும் அந்த நிறுவனத்தின் ரிசார்ட்களுக்கு சுற்றுலாச் செல்லலாம். நீங்கள் நயா பைசா எதுவும் கூடுதலாக தரவேண்டாம் என்பார்கள். ஆனால், எவ்வளவுக்கு எவ்வளவு பணம் பறிக்க முடியுமோ, அதனை செய்வார்கள்.
உதாரணத்துக்கு, சுற்றுலாச் செல்லாவிட்டாலும், ஆண்டு பராமரிப்புக் கட்டணத்தை அவசியம் செலுத்தவேண்டும். இந்த பராமரிப்புக் கட்டணம், சுமார் ரூ. 5,000 தொடங்கி இருக்கும்.” என்றவர் புதிதாக டைம் ஷேர் வாங்குபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை பட்டியலிட்டார்.
o முதலில் கொடுக்க வேண்டிய விலை என்ன?
o ஆண்டுக் கட்டணம் எவ்வளவு?
o பயன்படுத்தும்போது கொடுக்க வேண்டிய பயன்பாட்டுக் கட்டணம் எவ்வளவு?
o உறவினருக்குப் பரிசாகக் கொடுத்தால், கட்ட வேண்டிய விருந்தினர் கட்டனம் எவ்வளவு?
o கேட்கும்போது அறை கொடுக்கப்படுமா? இல்லை ஏதாவது சாக்குப் போக்குகள் சொல்லி மறுக்கப்படுமா?
o நாம் அறை எடுக்காவிடில், அதை மற்றவர்களுக்குக் கொடுக்கும்போது அதற்கான கட்டணம் வசூலிக்கப்பட்டு நமக்குக் கொடுக்கப்படுமா?
o ஒளிவு மறைவற்ற முறையில் முன்பதிவு செய்ய வசதி செய்யப்படுமா?
என்பது போன்ற விவரங்களை கவனிகக் வேண்டும் என்கிறார் நாகப்பன், ‘வேறு விதமாக யோசித்துப் பாருங்கள் என்று டைம் ஷேர் -க்கு மாற்றான திட்டம் ஒன்றை விளக்கி சொன்னார்.
”சீசனே இல்லாத காலத்தில் டைம்ஷேர் ரிசார்ட் ஒன்றில் ஒற்றை ஸ்டூடியோ அறையின் விலை ரூ.2 லட்சத்திற்கு மேல்; ஒரு அறை கொண்ட டைம் ஷேர், பீக் இல்லாத மீடியம் சீசனில் போக முதலீடு சுமார் ரூ.50 லட்சம். அதிகபட்சமாக பீக் சீசனில், 2 அறைகள் கொண்ட டைம்ஷேர் ரூ.10 லட்சத்திற்கும் மேல். இவ்வளவு லட்சங்களைக் கொட்டிய பின்னரும், ஆண்டுக் கட்டணம் மற்றும் பயன்பாட்டுக் கட்டணம் போக, விருந்தினர் கட்டனம் ஆகியவையும் கொடுக்க வேண்டும். இந்த ஆண்டுக்கட்டணமும் ஒவ்வொரு ஆண்டும் விலைவாசிபோல் ஏறிக்கொண்டே போகும். உதாரனமாக, ரூ.4,000 முதல் ரூ. 15,000 வரை கூடச் சொல்கிறது இக்கட்டணம்.
இதே முதலீட்டை (ரூ.3 லட்சம் முதல் ரூ.10 லட்சம்) வங்கியில் போட்டு வைத்தால்கூட வரும் வட்டியே ஆண்டுக்கு ரூ. 20,000 முதல் ரூ.1 லட்சம் வரை கிடைக்கும். அதோடு ஆண்டுக் கட்டணத்தையும் சேர்த்தால், பேசாமல் நாம் விரும்பிய இடங்களுக்குச் சென்று ஸ்டார் ஹோட்டலில் கூடத் தங்கலாம்!” என்று கணக்குகளை அள்ளிவிடுகிறார் நாகப்பன்,
”டைம்ஷேர் மோசடிக்கு எல்லாம் முக்கியக் காரணம், டைம் ஷேரை வரை முறைப்படுத்தவோ, இல்லை நெறிமுறைப்படுத்தவோ செபி போன்ற முறையான அரசு அமைப்புக்களோ, சட்ட திட்டமோ இல்லை என்பதுதான்” என்கிறார்.
சென்னையை சேர்ந்த வரதராஜன் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டவர். ”சில வருடங்களுக்கு முன்பு வரை ஒவ்வொரு அறையிலும் சமையல் செய்து சாப்பிடுவதற்கான வசதி இருந்தது. இப்போது அதை எடுத்துவிட்டார்கள். வேறு வழியே இல்லாமல் அங்கிருக்கும் ரெஸ்டாரன்ட்களில் சாப்பிட வேண்டிய நிலை. இதனால், ஒவ்வொருவருக்கும் ஒரு வேளைக்கு குறைந்தபட்சம் சுமார் 200 ரூபாய் கூடுதலாக செலவாகிறது. எனக்கு 20 வருடங்களுக்கு முன் ஜூன் மாதத்தில் டைம்ஷேர் ஒதுக்கினார்கள். இப்போது அது பீக் சீசன் என்று 7 நாள் தங்கினால், அதனை 9 நாட்களாக கணக்கு எடுத்துக் கொள்கிறார்கள்.
இதுபோக ஆண்டு பராமரிப்புக் கட்டணம் என சுமார் ரூ.4,000, தங்கும் காலத்தில் தண்ணீர், கரண்ட் என தினசரி ரூ.1,200 என பணம் பறித்து விடுகிறார்கள். டூர் போகவில்லை என்றாலும் பராமரிப்புக் கட்டணம் கட்டாயம் செலுத்தியாக வேண்டும். இந்த ஆண்டு புது ரூல் போட்டிருக்கிறார்கள். 15 நாள்களுக்கு முன்தான் அறை இருக்கிறதா? என்பதை உறுதி செய்வோம் என்கிறார்கள். 15 நாள்களுக்கு முன் எப்படி சுற்றுலா திட்டமிட முடியும். ரயில், பஸ்-ல் டிக்கெட் கிடைக்குமா? இப்போது எப்படி எல்லாம் ரூம் கொடுக்காமல் தட்டி கழிக்கலாம், எப்படி எல்லாம் பணம் பறிக்கலாம், கிட்டத்தட்ட மணி மைன்டட் ஆக மாறிவிட்டார்கள்” என்று நம்மிடம் கோபமாக பேசினார் வரதராஜன்.