கோவை ஸ்மார்ட் சிட்டி: இரட்டிப்பாகும் வளர்ச்சி
கடந்த இருபதாண்டுகளில் தான் ரியல் எஸ்டேட் துறை தமிழகத்தில் மிகப் பெரிய வளர்ச்சியைப் பெற்றது. தமிழகத்தில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி பெற்ற நகரங்களில் முதன்மையானது சென்னை. தமிழகத்தின் மற்ற நகரங்களைக் காட்டிலும் சென்னையின் ரியல் எஸ்டேட் தொழிலின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்தது. அடுக்குமாடிக் குடியிருப்புகளின், மனைகளின் விலையும் விண்ணைத் தொட்டது. இந்தச் சமயத்தில் தமிழகத்தின் ரியல் எஸ்டேட் சற்றுத் தொய்வடைந்தது.
இந்நிலையில்தான் கோயம்புத்தூர் போன்ற அடுத்த கட்ட நகரங்கள் மீது ரியல் எஸ்டேட் முதலீட்டளார்களின் கவனம் திரும்பியது. அதற்கு முன்பே சென்னைக்கு அடுத்தபடியான தொழில் நகரமாக இருக்கும் கோயம்புத்தூரில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி குறிப்பிட்ட அளவில் இருந்தது. வெளிநாடுவாழ் இந்தியர்களின் முதலீடும் கோயம்புத்தூர் ரியல் எஸ்டேட்டில் அதிகமாக இருந்ததாகச் சொல்லப்பட்டது.
சென்னைக்கு அடுத்தபடியாக அதிகமான தொழிற்சாலைகள் உள்ள நகரமாகக் கோவை விளங்குகிறது. பஞ்சு ஆலைகள் நிறைந்த நகரமாகும். மேலும் ஆயத்த ஆடை உற்பத்தி ஆலைகள் நிறைந்த திருப்பூருக்கு மிக அருகில் உள்ள நகரம். மேலும் மின் மோட்டர், இயந்திரவியல் பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களும் இங்கு அதிகம். வேளாண்மைத் தொழில் சிறப்பாக நடைபெற்று வரும் ஊர் என்னும் சிறப்புப் பெயரும் கோவைக்கு உண்டு.
சமீப காலமாகக் கல்வி நிறுவனங்கள் கோவையின் புறநகர்களில் அதிக அளவில் தொடங்கப்பட்டுவருகின்றன. மருத்துவமனைகளும் அதிகம். இந்த அம்சங்கள் கோவை ரியல் எஸ்டேட்டின் வளர்ச்சிக்கான காரணங்கள் எனலாம். கோவையில் நிலவும் இதமான தட்வெட்ப நிலையும் இதற்கான காரணங்களுள் ஒன்று. மேலும் சென்னையில் உள்ள பல மென் பொருள் நிறுவனங்கள் கோவையிலும் தங்கள் அலுவலங்ககளைத் தொடங்கி வருகின்றன.
இந்திய அளவில் ரியல் எஸ்டேட் தொழில் தோய்வடைந்த நிலையிலும் சென்னையைப் போலும் அதைவிடச் சிறப்பாகவும் கோவை ரியல் எஸ்டேட் இருந்தது. சமீபத்தில் தேசிய அளவில் ரியல் எஸ்டேட் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் சண்டிகர், கொச்சி போன்ற இரண்டாம் நிலை நகரங்களில்தான் இனி ரியல் எஸ்டேட் வளர்ச்சி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன. அந்தப் பட்டியலில் இடம்பெற்ற ஒரே தமிழக நகரம் கோயம்புத்தூர்தான்.
சென்னையில் ரியல் எஸ்டேட் விலைகள் கட்டுக்கடங்காமல் போய்விட்டன. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவர் நகரின் மையத்தில் வீடு வாங்க முடியாத சூழலே நிலவுகிறது. இந்நிலையில் கோவை அதற்கு மாற்றான நகரமாக உள்ளது. கோவையின் மத்தியப் பகுதியான சாய்பாபா காலனி, ராம் நகர் போன்ற பகுதிகளில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவர் எளிதாக வீடு வாங்கும் சூழல் உள்ளது. மேலும் கோவையின் புறநகர்ப் பகுதிகளாகக் கருதப்படும் மருதமலை சாலைப் பகுதியும் அவினாசி சாலைப் பகுதியும் நகரின் மத்தியிலிருந்து வெகு தொலைவில் இல்லை. மேலும் இயற்கையான, மாசற்ற சூழலில் உள்ளது. இதனால் மருதமலை சாலையில் வடவள்ளி மக்கள் வீடு வாங்க விரும்பும் பகுதிகளில் முதன்மையானதாக இருக்கிறது. அவினாசி சாலைப் பகுதி வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள பகுதி எனச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 20 ஸ்மார்ட் சிட்டிகள் பட்டியலில் கோவையும் இடம் பிடித்துள்ளது. இந்த அறிவிப்பால் கோவை ரியல் எஸ்டேட் மேலும் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெர்மனிய அரசின் உதவியுடன் கோவை ஸ்மார்ட் சிட்டி உருவாகவிருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் கோவையின் வளர்ச்சியை இரட்டிப்பாக்கும்.