லிங்கா’ பிரச்சனையால் சுதாரித்த தாணு
கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த ‘தெறி’ திரைப்படம் வரும் 14ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அவர் தயாரித்த மற்றொரு திரைப்படமான ‘கபாலி’ படமும் ரிலீஸூக்கு இன்னும் ஒருசில நாட்களில் தயாராகிவிடும். இந்நிலையில் தெறி படத்தின் அனைத்து ஏரியாவையும் நல்ல விலைக்கு விற்பனை செய்த தாணு, ‘கபாலி’ படத்தை தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட சொந்தமாக ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
லிங்கா’ படம் நல்ல பிசினஸ் ஆனாலும், வேண்டுமென்றே ஒருசில விநியோகிஸ்தர்கள் ரஜினிக்கு எதிராக பின்னப்பட்ட வலையில் வீழ்ந்து ‘லிங்கா’ தோல்வி அடைந்ததாகவும் அதற்கான நஷ்ட தொகையை கொடுக்க வேண்டும் என்றும் போராட்டம் நடத்தினர். எனவே ‘கபாலி’ படத்தை விநியோகிஸ்தர் மூலம் ரிலீஸ் செய்யாமல் சென்னை தவிர மற்ற அனைத்து ஏரியாவிலும் சொந்தமாக ரிலீஸ் செய்ய தாணு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. லாபம் அல்லது நஷ்டம் எதுவானாலும் தானே ஏற்றுக்கொள்வதாகவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை பகுதியின் ரிலீஸ் உரிமையை எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனத்திடம் தாணு விற்பனை செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதே நிறுவனம்தான் ‘தெறி’ படத்தையும் ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.