அமெரிக்காவின் பிரபல கால்பந்து வீரர் நடுரோட்டில் சுட்டுக்கொலை. பெரும் பரபரப்பு
அமெரிக்காவின் பிரபல கால்பந்து வீரர் சாதாரண தகராறு ஒன்றில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள நியூ ஆர்லியான்ஸ் செயின்ட்ஸ் கால்பந்து அணியின் முன்னணி வீரராக திகழ்ந்த 34 வயது வில் ஸ்மித் என்ற கால்பந்து வீரர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஓய்வுக்கு பின்னர் மனைவியுடன் பல பகுதிகளுக்கு சுற்றுலா சென்று வந்த வில்ஸ் ஸ்மித், மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அவருடைய கார் பிரெஞ்ச் குவார்ட்டர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவருடைய காருக்கு பின்னால் வந்த மற்றொரு வாகனம் இவரது காரில் மோதியது. இதில் வில் ஸ்மித்துக்கும், அந்த வாகன டிரைவரான கார்டெல் ஹெயிஸ் என்பவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் வாய்த்தகறாரு முற்றிவிடவே, ஆத்திரமடைந்த கார்டெல் ஹெயிஸ், தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து வில் ஸ்மித்தை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் வில்ஸ்மித் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். இந்த சம்பவத்தில் வில் ஸ்மித்தின் மனைவிக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த நியூ ஆர்லியான்ஸ் போலீசார், கார்டெல் ஹெயிசை கைது செய்தனர். இந்த கொலை சம்பவத்துக்கு கார் விபத்து தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் முன்பகை காரணமா? என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்