வானிலை ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும்: மாணவர்களுக்கு எஸ்.ஆர்.ரமணன் அறிவுரை
வானிலை ஆராய்ச்சித் துறையில் மாணவர்கள் ஆர்வமுடன் ஈடுபட முன்வர வேண்டும் என வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறினார்.
மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி பொறியியல் கல்லூரியின் 5ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இதில், எஸ்.ஆர்.ரமணன் பேசியதாவது:
சர்வதேச அளவில் வானிலை ஆய்வு நடவடிக்கைக்கு கணினி பொறியியல், தகவல் தொடர்புத் துறை பேருதவியாகத் திகழ்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் வானிலை தொடர்பான ஆய்வு நடவடிக்கைகளில் இந்தியா வியக்கத்தக்க வளர்ச்சி பெற்றுத் திகழ்வதற்கு கணினி தொழில்நுட்பம் பேருதவி புரிகின்றது. வானிலை ஆராய்ச்சித் துறையில் மாணவர்கள் ஆர்வமுடன் ஈடுபட முன்வர வேண்டும் என்றார்.
முன்னதாக, 422 பேருக்கு இளங்கலை பொறியியல் பிரிவிலும், 24 பேருக்கு முதுகலை பொறியியல் பிரிவிலும் பட்டங்களை மைக்ரோ சாப்ட் நிறுவன சேவை பயிற்சித் தலைவர் நிதின் ஷர்மா வழங்கினார்.
மேலும், மின்னணுவியல்,தொலை தொடர்புத் துறையில் தர வரிசைப் பட்டியலில் இடம்பெற்று இரு தங்கப் பதக்கங்களைப் பெற்ற மாணவி ஜி.சுவேதா பாராட்டப்பட்டார்.
கல்லூரித் துணைத் தலைவர் கலைச்செல்வி லியோ முத்து, தலைமை செயல் அதிகாரி சாய் பிரகாஷ் லியோ முத்து, அறங்காவலர் சர்மிளா ராஜா, முதல்வர் பழனிக்குமார், செயல் இயக்குநர் சத்தியமூர்த்தி, ஆய்வுத் துறைத் தலைவர் ராஜேந்திரபிரசாத், இயக்குநர் மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.