பேப்பர், பேனா இல்லாமல் ‘ஈஸி நோட்ஸ்!’
காகிதமும் இல்லாமல், பேனாவும் இல்லாமல் குறிப்பெடுக்க முடிந்தால் எப்படி இருக்கும்? அந்தக் குறிப்புகளை ஒரே இடத்தில் தொகுத்து வைத்துக்கொள்ளவும், தேவை எனில் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் முடிந்தால் எப்படி இருக்கும்?
இந்த இரண்டையும் ‘பின்சைடு’ இணையச் சேவை சாத்தியமாக்குகிறது. இன்னும் பலவற்றையும் சாத்தியமாக்கும் ஆற்றலையும் அது பெற்றிருக்கிறது.
வடிவமைப்பு, தோற்றம் ஆகிய இரண்டிலுமே எளிமையாக இருக்கும் பின்சைடு பயன்படுத்தவும் எளிதாக இருக்கிறது. எளிமையை மீறி அதன் பயன்பாடு எல்லையில்லாமல் விரிவதுதான் ஆச்சரியம்.
சரி, பின்சைடு மூலம் என்ன செய்யலாம்?
அடிப்படையில் பின்சைடு ஓர் இணையப் பலகை. அதாவது இணையக் குறிப்பேடு என்று வைத்துக்கொள்ளலாம்.
உள்ளங்கை அளவு மஞ்சள் வண்ணக் காகிதத்தில் குறிப்பெழுதி அலுவலக மேஜை முன் ஒட்டி வைத்துக்கொள்வது உண்டல்லவா? அது போலவே பின்சைடு தளத்தில் நமக்கான குறிப்புச்சீட்டை உருவாக்கிக்கொள்ளலாம். இந்தச் சீட்டில் செய்ய வேண்டியது, நினைவில் கொள்ள வேண்டியது என எதை வேண்டுமானாலும் குறித்து வைக்கலாம்.
குறிப்புச் சீட்டுகளைப் பெற பின்சைடு தளத்தில் உறுப்பினராகச் சேர்ந்தாலே போதும். உறுப்பினராக இணைவதற்கு முன் இந்தச் சேவையை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என முன்னோட்டம் பார்க்கும் வசதியும் அளிக்கப்படுகிறது. இதற்காக ‘டெமோ போர்ட்’ எனும் விளக்கப் பலகை நம் முன் வைக்கப்படுகிறது.
விளக்கப் பலகை கரும் பலகை போல வெறுமையாக இருந்தாலும் அதில் இடது பக்கத்தின் மேலே உள்ள, புதிய குறிப்புக்கான பகுதியை ‘கிளிக்’ செய்ததுமே, கரும்பலகையில் மஞ்சள் வண்ணக் குறிப்புச்சீட்டு தோன்றுகிறது. மனதில் உள்ளதை அதில் ‘டைப்’ செய்யலாம். தேவையெனில் ஒளிப்படமும் இணைக்கலாம். அவ்வளவுதான் குறிப்புச்சீட்டைத் தயார் செய்தாகிவிட்டது.
இனி இந்தச் சீட்டை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். இல்லையெனில் உங்களுக்கு மட்டுமே வைத்துக்கொள்ளலாம். இதில் வெறும் நினைவூட்டலை எழுதி வைக்கலாம். அல்லது செய்ய வேண்டிய செயல்களைப் பட்டியல் போட்டுக்கொள்ளலாம். பார்க்க வேண்டிய படங்கள், படிக்க வேண்டிய புத்தகங்கள் என நீங்கள் விரும்பும் எதையும் குறித்து வைத்துக்கொள்ளலாம்.
இப்படி எத்தனை குறிப்புகளை வேண்டுமானாலும் உருவாக்கலாம். குறிப்புச் சீட்டுகளைக் கரும்பலகையில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் கொண்டு போய் வைக்கலாம். அவற்றுக்கான நோக்கம் நிறைவேறிவிட்டால் குறிப்புகளை நீக்கிவிடலாம்.
தனிப்பட்ட முறையில் பயன்படுத்த நினைத்தால், இதை உங்களுக்கான இணையப் பலகையாகக் கருதிக்கொள்ளலாம். சந்திப்புகளுக்கான கூட்டங்களை நினைவில் கொள்வது முதல் இன்று மாலை வாங்கி வர வேண்டிய மளிகை சாமான்கள் வரை எதற்காக வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். இணையத்தில் பார்க்கும் பயனுள்ள இணையதளங்களையும் கூட இப்படி ‘புக்மார்க்’ செய்துகொள்ளலாம்.
பகிர்தலுக்கான விஷயங்கள் என்றால் இந்தக் குறிப்பேட்டை நண்பர்களுடனும் கூடப் பகிர்ந்து கொள்ளலாம். நிகழ்ச்சிக்கு ஒன்றாகத் திட்டமிடுவது அல்லது அலுவலகப் பணி பற்றி விவாதிப்பது போன்றவற்றுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். குடும்பத்தினர் அல்லது உறவினர்களுடன் சேர்ந்து விடுமுறைக் காலப் பயணத்தையும் திட்டமிடலாம். நண்பர்கள் இதிலேயே ‘எடிட்’ செய்து கருத்து தெரிவிக்கலாம்.
பொதுக் கருத்து என்றால் உலகுடன் பகிர்ந்து கொள்ளவும் இந்தப் பலகையைப் பயன்படுத்தலாம். மாற்றங்களுக்கான எண்ணங்களை வெளியிட்டு ஆதரவு திரட்டவும் இது ஏற்றதாக இருக்கும். வலைப்பதிவு தொடங்குவதைச் சுமையாக நினைத்தால், எளிதாக இதில் எளிதாக எண்ணங்களைப் பதிவுசெய்து அந்தப் பக்கத்தை உலகின் பார்வைக்குச் சமர்ப்பிக்கலாம். மாணவர்களுக்கும் இது ஏற்றதே.
இந்தச் சேவையை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்பது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. புக்மார்க் செய்து கொண்டு, முயன்று பாருங்கள்: http://pinsi.de/index.php