அதிமுக தேர்தல் அறிக்கையும், திமுக வேட்பாளர் பட்டியலும் வெளியாவது எப்போது?
திமுகவின் தேர்தல் அறிக்கைக்காக காத்திருந்த அதிமுக விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடவுள்ளது. அதேபோல் திமுகவின் வேட்பாளர் பட்டியலை பார்த்த பின்னர் அதிமுகவின் வேட்பாளர் பட்டியலில் சில மாற்றங்கள் இருக்கும் என்று அதிமுக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தேர்தல் அறிக்கையை வெளியிடாமலேயே பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார். ஆனால் முன்கூட்டியே 227 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டாலும் இதுவரை ஐந்துக்கும் அதிகமான முறை வேட்பாளர்கள் மாற்றப்பட்டனர். இந்நிலையில் நேற்று வெளியாகவிருந்த திமுக வேட்பாளர் பட்டியல் திடீரென 15ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த வேட்பாளர் பட்டியல் வெளிவந்த பின்னர் அதிமுக வேட்பாளர் பட்டியலில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ஜெயலலிதா திமுகவை மட்டுமே விமர்சனம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் நலக்கூட்டணி, தேமுதிக, பாஜக உள்பட எந்த கட்சியின் செயல்பாடுகளையும் அதன் தலைவர்களையும் ஜெயலலிதா விமர்சிக்காதது பெரும் வியப்பை அளிக்கின்றது. ஆனால் அனைத்து கட்சி தலைவர்களும் ஜெயலலிதாவையும், அதிமுக ஆட்சியையும் விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரத்தின் இடையில் தேர்தல் அறிக்கையை வெளியிடுவார் என்றும் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் ஒரே நாளில் மனுதாக்கல் செய்வார்கள் என்றும் அதிமுக நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.