காஷ்மீர்: பெண் முதல்வர் பதவியேற்ற ஒருசில நாட்களில் துப்பாக்கி சூடு. 3 பேர் பலி

காஷ்மீர்: பெண் முதல்வர் பதவியேற்ற ஒருசில நாட்களில் துப்பாக்கி சூடு. 3 பேர் பலி

kashmirகாஷ்மீர் முதல்வராக மெகபூபா பதவியேற்றுக்கொண்ட ஒருசில நாட்களில் காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்றில் மூன்று அப்பாவிகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.  காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஹண்ட்வாரா என்ற நகரில் பள்ளி மாணவி ஒருவரை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசி எறிந்து வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட அசாதாரண நிலையை அடக்கும் பொருட்டு பாதுகாப்பு படையினர் துப்பாக்கியில் சுட்டனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இரண்டு அப்பாவி இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்த நிலையில் படுகாயம் அடைந்த ஒரு பெண்ணும் இன்று மரணம் அடைந்தார். இதனால் பலி எண்ணிக்கை மூன்றாக உயரந்துள்ளது.

இந்த  சம்பவம் குறித்து ராணுவம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவி தான் எவ்வித பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகவில்லை எனக் கூறும் வீடியோ ஒன்றை ராணுவம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ போலீஸ் காவலில் எடுக்கப்பட்டதால், அவர் பயமுறுத்தப்பட்டிருக்கலாம் என பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் ஹண்ட்வாரா, குப்வாரா மாவட்டங்களில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. பிரிவினைவாத தலைவர்கள் பலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஒருசில தலைவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புக் காவலில் உள்ளதாகவும் ஜம்முகாஷ்மீரில் இருந்து வெளிவரும் செய்திகள் கூறுகின்றன. மேலும் இந்த பதற்றமான சூழலை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கருடன் காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி ஆலோசனை நடத்தி வருகிறார்.

Leave a Reply